திராவிட இயக்கங்களைக் கலைத்து விடலாம்: தொ.மு. பரமசிவம்.. உங்க கருத்து என்ன?

periyar-anna-karunanithy60001சென்னை: முன்னெப்போதையும் விட பெரியாரின் சாதி ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகளின் தேவை இருக்கிறது; அதே நேரத்தில் தற்போதைய திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு புதிய ஆக்கப்பூர்வமான திராவிட இயக்கம் தேவை என்று தமிழர் பண்பாட்டு ஆய்வாளர் தொ.மு.பரமசிவம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக “நமது ஒன் இந்தியா” தமிழ் வாசகர்களே உங்களது கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்க…. சிறந்தவற்றை வெளியிடுகிறோம்…

விகடன் குழுமத்தின் புதிய முயற்சியான “விகடன் தடம்” மாத இதழுக்கு (ஜூலை 2006) தமிழர் பண்பாட்டியலின் ஆய்வாளர் பேராசிரியர் தொ.மு. பரமசிவன் நீண்ட பேட்டி அளித்துள்ளார். அதில் பெரியார், திராவிட இயக்கம் தொடர்பாக தொ.மு.ப. கூறி உள்ளதாவது:

கேள்வி: பெரியார் சாதியை அசைத்துப்பார்த்தார்’ என்று சொன்னீர்கள். ஆனால், தற்போது திராவிட இயக்கம் வீழ்ச்சியை நோக்கித்தானே சென்று கொண்டிருக்கிறது? இப்போதும் திராவிடக் கட்சிகளின் தேவை இருக்கிறது என நினைக்கிறீர்களா?

திராவிடக் கட்சிகள் நைந்துபோய்விட்டன; நீர்த்துப் போய்விட்டன. இவர்கள் அழிந்த பிறகு அங்கு இருந்து இனி புதிதாக உருவாகிவருகிற ஓர் இயக்கத்தால்தான் பெரியாரின் கொள்கைகளை மேலெடுத்துப் போக முடியும். பெரியாரின் கொள்கைகளை மேலெடுத்துச் செல்வதற்கான சக்தி இவர்களுக்குக் கிடையாது.

ஆனால், பெரியார் கொள்கைகள் ஒருபோதும் சாகாது. மானுட விடுதலை ஒன்றுதான் பெரியாரின் நோக்கம். அதற்கு எதிரான அத்தனை அம்சங்களையும் அவர் எதிர்த்தார். அதனால், யாரெல்லாம் மானுட விடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் பெரியாரிடம் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு. அவரின் பல கோட்பாடுகள் அதிரடியானவைதான். ஆனால், அவை எல்லாம் அந்தக் காலத்தின் தேவையால் உருவானவை. அதன் பின்னிருந்த அடிநாதம் என்பது மானுட விடுதலைதான்.

இப்போது உள்ள திராவிட இயக்கங்களையும் திராவிடம் எனும் கருத்தியலையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. திராவிடக் கட்சிகள் தோற்றுள்ளன என்பது உண்மைதான். என்னைக் கேட்டால் காந்தி, `காங்கிரஸைக் கலைத்துவிடலாம்’ என்று சொன்னதுபோல, `திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட்டு புது இயக்கங்கள் செய்யலாம்’ என்று சொல்வேன்.”

கேள்வி: இன்று இந்துத்துவ அறிவுஜீவிகள் அம்பேத்கரைக் கொண்டாடுவதன் மூலமாக உட்செரிக்கப் பார்க்கிறார்கள். சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் அம்பேத்கரை ஒரு ரிஷி என வர்ணிக்கிறார்கள். இப்படியான சூழலில் திராவிட இயக்கத்தைக் கலைப்பது என்பது மாதிரியான உரையாடல்கள் சரியாக இருக்குமா?

” இல்லை… நான் பெரியார் தேவை இல்லை எனச் சொல்லவில்லை. பெரியார் முன்னிலும் அதிகமாகத் தேவை என்கிறேன். எனவே, பெரியாரை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் இயக்கங்கள் வேண்டும் என்கிறேன். அருண்சோரி போன்ற பார்ப்பனிய அறிவுஜீவிகள், `ஒர்ஷிப்பிங் ஃபால்ஸ் காட்’ போன்ற நூல்களை எழுதி, அம்பேத்கர் மேல் அவதூறுசெய்யப்பார்த்தார்கள்.

இன்று அவரைக் கொண்டாடுவதன் மூலமாக அவரை அழிக்க முடியும் என நினைக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் என்ற கட்டுமானம் பிராமணியத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அம்பேத்கரை அவர்களால் உட்செரிக்க முடிந்தால்கூட, பெரியாரை ஒருபோதும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவேதான் அழிக்க வேண்டும் எனத் துடிக்கிறார்கள். பெரியார் – அம்பேத்கர் என்ற பைண்டிங்கில் பெரியாரை உடைப்பது என்ற வேலையையும் செய்துவருகிறார்கள்.

அம்பேத்கரை பெரியாரிடம் இருந்து தனிமைப்படுத்தினால், வேலை சுலபம் ஆகும் என நினைக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள சில அறிவுஜீவிகள் பலியாகிறார்கள். பெரியாரை விமர்சிப்பது ஒரு மோஸ்தர் என, சில அறிவுஜீவிகள் நினைக்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் பெரியாரை அழிக்க முடியாது.

தலித் மக்கள் பெரியாருடன்தான் இருக்கிறார்கள். தங்களது அடையாளச் சிக்கலுக்காக சிலர் இப்படிச் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்கள் சோர்ந்துபோவார்கள். பெரியாரின் அரசியலில் எதிர்ப்பு இருந்ததே தவிர, வெறுப்பு இருந்தது இல்லை. இவர்களிடம் வெறுப்புதான் இருக்கிறது. இந்த அரசியல் மக்களை வென்றெடுக்கப் போதாது. இவ்வாறு தொ.மு.பரமசிவன் கூறியுள்ளார். தொ.மு.ப.வின் ‘திராவிட இயக்கங்களைக் கலைத்துவிடலாம்; பெரியாரின் தேவை இருக்கிறது” என்பது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

உங்களது கருத்தை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தட்டிவிடுங்க பார்க்கலாம்

tamil.oneindia.com

TAGS: