ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட கேரளா தம்பதி

isis-sri-lankaஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக் கொண்டுள்ள இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், இலங்கையில் இரண்டு மாதங்களாக தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஸலபி இஸ்லாமிய கற்கை நிலையம் ஒன்றில் பயின்றுள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் உட்பட 17 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

நீர்கொழும்பில் உள்ள குறித்த கற்கை நிலையம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி முபாரக் அவர்களை நாம் தொடர்பு கொண்டு வினவிய போது, அங்கு தாருஸ் ஸலபி என்ற கற்கை நிலையம் ஒன்று இருப்பதாகவும், எனினும் அங்கு இஸ்லாமிய கற்கைகளே போதிக்கப்படுவதாகவும் தீவிரவாத கற்கைகள் இடம்பெறுவதில்லை என்றும் கூறினார். எனினும் அங்கு உள்நாட்டு மாணவர்களே கற்கின்றார்கள் என்றும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த தம்பதி இலங்கைக்கு வந்திருந்தமை தொடர்பான தகவல்கள் இல்லை என்று இலங்கையின் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளன.

-http://www.athirvu.com

TAGS: