விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்: வாட்ஸ்அப் மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்த கமல்

காலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதாக நடிகர் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

சபாஷ் நாயுடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தீவிர மருத்துவ கவனிப்பில் இருக்கும் கமல் ஹாசன் உடல்நிலை குறித்து இணையதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அவருக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமாக விசாரித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து வாட்ஸ்அப் வாயிலாக ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் கமல் ஹாசன்.

அந்த வாட்ஸ்அப் செய்தியில், ‘எனது உடல்நலம் குறித்து கவலைப்படும் ரசிகர்கள் மற்றும் நண்பர்களை எண்ணி மனம் நெகிழ்கிறேன். பல விபத்துக்கள் நடந்தும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம். எனது உடல்நலம் குறித்த தெளிவை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன்’ என்று கூறியுள்ளார் கமல்.

-maalaimalar.com