திருவள்ளுவரை இதை விட கேவலப்படுத்த முடியாது!

thiruvalluvarஹரித்துவார்: உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த பெரும் புலவர் திருவள்ளுவர்.. நாம்தான் இப்படி மெச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது வட இந்திய சகோதரர்கள் இந்த புலவரை தூக்கி தூரப் போட்டு விட்டார்கள்….

ஒரு பூங்காவில்! புல் தரையோடு தரையாக வீழ்ந்து கிடக்கிறது வள்ளுவம். இத்தனைக்கும் யாரும் எங்கள் பெரும் புலவனுக்கு சிலை வையுங்கள் என்று சொல்லவில்லை. இவர்களாகவே சிலை செய்தார்கள். இவர்களாகவே நிறுவப் போகிறோம் என்றார்கள், இவர்களாகவே எடுத்துச் சென்றார்கள்.. இன்று வள்ளுவர் புல்லில் வீழ்ந்து கிடக்கிறார்..

அதைப் பற்றிக் கவலை்படத்தான் ஒருவரும் இல்லை. இதை விட திருவள்ளுவரை யாரும் கேவலப்படுத்த முடியாது. அகில உலகத்திலும் வள்ளுவத்திற்கும், அதை மொழிந்த வள்ளுவருக்கும் மதிப்பு உள்ள நிலையில் நமது நாட்டின் ஒரு பகுதியில் அந்த வள்ளுவரை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்த்து தூரப் போட்டுள்ள கொடுமையை என்னவென்று சொல்வது?

கங்கை ஆற்றின் கரையில் ஹரித்துவாரில், வள்ளுவர் சிலையை நிறுவப் போகிறேன் என்று கூறினார் பாஜக எம்.பி தருண் விஜய். சிலையும் செய்து அதை ஹரித்துவாருக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள சாதுக்குள் கும்பலாக திரண்டு வந்து திருவள்ளுவரின் சிலையை இங்கு நிறுவக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, திறப்பு விழாவில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சங்கராச்சாரியார் செளக் என்ற இடத்தில் சிலையை வைக்கலாம் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் அனுமதி அளித்தார். ஆனால் அங்கு வைக்கவும் சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரணம், திருவள்ளுவர் தலித் என்பதால். ஆனால் அதை பகிரங்கமாக கூறாமல், திருவள்ளுவருக்கும், ஹரித்துவாருக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டனர் இந்த சாதுக்கள். இதனால் சிலையை தூக்கி தற்போது ஹரித்துவாரில் உள்ள ஒரு பூங்காவில் பாலிதீன் கவரைச் சுற்றி தரையில் போட்டுள்ளனர். பரிதாபமாக வீழ்ந்து கிடக்கிறது வள்ளுவம்.

தமிழ் என்ற வார்த்தையைக் கூட தனது திருக்குறளில் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாதவர் வள்ளுவர். எந்த மதத்திற்கும், எந்த இனத்திற்கும், எந்த மொழிக்கும் உரித்தானவராக தன்னைக் காட்டிக் கொள்ளாமல் பொது மறையாக வாழ்ந்தவர் வள்ளுவர். அவருக்கு வட இந்தியா கொடுத்துள்ள பெருமை புல் தரைதான்! இதை விட யாரும் திருவள்ளுவரை கேவலப்படுத்த முடியாது!

tamil.oneindia.com

TAGS: