காஷ்மீர் பிரிந்து செல்வது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமாம்… சொல்வது நவாஸ் ஷெரீப்

nawasஇஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து பிரிந்து சென்று தனிநாடாவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக வன்முறை வெடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் தனிநாடு பிரிவினைவாதிகள், ஐ.நா. சபையிடம் உறுதியளித்தபடி காஷ்மீர் மக்களிடம் பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு இதை நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை. அது வழக்கொழிந்து விட்ட அம்சம். காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதே பிரச்சினைக்கு காரணம். அவர்கள் நமது சொந்த மக்கள். அவர்களை நாம் சரியான பாதைக்கு கொண்டு வருவோம். உண்மையை புரிய வைப்போம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காஷ்மீர் வன்முறைகளைக் கண்டித்து பாகிஸ்தான் அரசாங்கம் கருப்பு தினத்தை இன்று அனுசரித்தது. இதையொட்டி அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், காஷ்மீர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக நாம் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்து வருகிறோம்.

இதன்மூலம் தங்களது உரிமைகளுக்காக போராடும் காஷ்மீரிகளுடன் நாங்கள் துணையாக இருக்கிறோம் என்ற வலிமையான செய்தியை உலகுக்கு நாங்கள் உணர்த்துகிறோம். காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான உரிமைக்குரலை இந்தியாவால் ஒடுக்க முடியாது. அவர்கள் விடுதலை அடைந்தே தீருவார்கள். காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. எனவே, அங்கு வாழும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவர்களின் முடிவு என்ன என்பதை அறிய அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரம் எங்களின் உள்நாட்டுப் பிரச்சனை என கூறும் இந்தியாவின் போக்கு நியாயமானது அல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்தியா நிகழ்த்திவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் கவனித்து வருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: