கச்சதீவு விவகாரம்! வலுக்கும் எதிர்ப்புகள்

kaccha theevuஇலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை மீளவும் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வடசென்னை தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீறும் வகையில் இலங்கைக் கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 15ம் திகதி நான்கு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை மீளப்பெற்றுக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுபடியற்றது.

எனவே, கச்சதீவை மீட்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் ஏ.அன்வர்ராஜா,

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களைத் தாக்கி துன்புறுத்தியும் வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் துயரத்திற்குப் பிரதான காரணமே வெளிவிவகார கொள்கையின் தவறான கையாளுகைதான்.

எனவே, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: