தேவர் மகனுக்கு குத்தப்படாத முத்திரை.. கபாலிக்கு மட்டும் ஏன்?.. ரஞ்சித் அதிரடி கேள்வி!

ranjith-interviewசென்னை: கபாலி தலித் சினிமா அல்ல… அது ஒடுக்கப்பட்ட நிலையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கான சினிமா என்று கபாலி படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். தேவர் மகன்… சின்னக்கவுண்டர் போன்ற படங்கள் வரும் போது அது தேவருக்கான படம் என்றோ கவுண்டருக்கான படம் என்றோ கூறாதவர்கள், கபாலியை தலித் சமுதாய மக்களுக்கான படம் என்று கூறுவது ஏன் என்பதும் ரஞ்சித்தின் கேள்வியாக உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது. சில கலவையான விமர்சனங்களும் இருக்கிறது. இந்த நிலையில் கபாலி ரஜினி படமா? அரசியல் படமா… தலித் சினிமாவா? என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் ஆசிரியர் குணசேகரன் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பேட்டியை படியுங்கள்

கபாலி என்ற பெயர் வில்லன்களுக்கு மட்டுமே இருந்தது. அதை ஒரு ஹீரோவிற்கு வைத்தேன். இன்றைக்கு கபாலி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் பெருமையுடன் தங்களின் பெயரை கூறுகின்றனர் என்றார் ரஞ்சித்

ஒடுக்கப்பட்டவர்கள் என்றால், ஒடுக்குபவர்களும் அவர்களும்தான் அந்தப் பிரச்சினைக்கு உரியவர்கள். அவர்கள் அமர்ந்து பேச வேண்டும். உரையாட வேண்டும். இது எல்லாத் தரப்பிலும் நடக்க வேண்டும். அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். ஒருவன் சொல்ல, இன்னொருவன் கேட்பது என்பது கூடாது. உரையாடல் நடைபெற வேண்டும்.

தமிழ் நாட்டில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை இருக்கும் போது மலேசியாவை தேர்ந்தெடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், தமிழர்கள் எங்கே போனாலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். மலேசியாவில் ஜாதி சங்கங்கள் அதிகம் இருக்கின்றன.

தமிழர்கள் அதிக அளவில் ஒடுக்கப்படுகிறார் என்பதைத்தான் இந்தப் படத்தில் கூறியிருக்கிறேன். தமிழர்கள் எங்கே போனாலும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். எனக்கு தமிழின் மீது ஆர்வம் அதனாலேயே என்னை பா.ரஞ்சித் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.

மலேசியா தமிழர்களுடைய வாழ்க்கையை எதார்த்தத்தை எந்த அளவிற்கு பிரதிபலிக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், மலேசியா நாட்டு கதைக்களத்தில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், முழுமையான எதார்த்த படம் இல்லை என்று ஒத்துக் கொண்டார். மெட்ராஸ் பக்கத்தில் எனக்கு முழுமையான மொழி தெரியும். மலேசியாவில் இதை என்னால் முழுமையாக கொண்டு வர முடியவில்லை என்றார்.

நான் கோட் சூட் போடுவேண்டா… நான் கால் மேல் கால் போட்டு அமருவேன்… நான் ஆளப்பிறந்தவன்டா போன்ற வசனங்கள் வைக்கப்பட்டதற்கு பதிலளித்த ரஞ்சித், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் ஒருவர் அணியும் உடை, பேசும் வசனம் அவசியமான இருந்தது என்றார்.

கபாலி தலித் படமா என்ற கேள்விக்கு சட்டென்று பதில் வருகிறது ரஞ்சித்திடமிருந்து. முதலில் இது தலித் படமல்ல. இது ஒரு படம். தேவர் மகன், சின்னக்கவுண்டர் படங்கள் வரும் போது இது மாதிரியான கேள்விகள் எழவில்லை. இப்போது ஏன் தலித் படம் என்று கூறுகிறீர்கள். இது தலித் படமல்ல என்றார்.

தமிழ் சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகம். மலேசியா தமிழர்களின் சூழ்நிலை வேறு. சீனர்கள், மலாய்காரர்கள் நிறம் வெண்மை. தமிழர்கள் கறுப்பர்கள் என்ற தாழ்வு இருக்கிறது. இந்த கதை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு கனெக்ட் ஆகனும் என்றார்.

அரசியல்வாதிகள் வெள்ளை உடை வேஷ்டி சட்டை அணிவது அடையாளம். ஆனால் தலித் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருமாவளவன் ஆகியோர் டிப் டாப் ஆக அணிகின்றனர் என்ற கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்கிறார் ரஞ்சித். பொதுவாக உடை என்பது கவனத்தை ஈர்க்கும் விசயம். நான் பேசுவதற்கு வெளிப்புறத் தோற்றம் முக்கியம் எனவே இதில் அந்த உடைகளை உபயோகித்தேன் என்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு உடையில் கம்பீரம் அவசியம். மகாத்மா காந்தி சட்டை அணியாமல் போனதற்கும்… அம்பேத்கர் கோட் சூட் போட்டதிலும் அரசியல் இருக்கிறது. மிடுக்கான உடை… கம்பீரமான தோற்றம். கால் மேல் கால் போட்டு அமருவது அதிகாரத்தின் குறியீடுதான். உங்கள் முன்பு நான் அமர்ந்திருப்பதே அதிகாரம்தானே.

கபாலி பார்த்து விட்டு நிறைய திட்டுகிறார்கள். கபாலியைப் பற்றிய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கிறது ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கக் கூடாது என்று முன்னணி பத்திரிக்கையும் கூறியுள்ளது. எனக்கு இது முன்பே தெரியும். மெட்ராஸ் பார்த்து விட்டுதான் ரஜினி கூப்பிட்டார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார் என்றார் ரஞ்சித். படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள். என்னை சாதி ரீதியாக விமர்சனம் செய்வது ஏன்? இதை நான் அரசியல் செய்யவில்லை.

மக்களுடைய பிரச்சினையை சொல்வதுதான் சினிமாதான். கலையை அரசியல் ஆக்க நினைக்கிறேன் இது அரசியல் படமல்ல… கலையே அரசியல்தான்.

ரஜினி அரசியல் வசனங்களை கவனமாக புறக்கணித்து வந்தார். பாட்சா, அருணாசலம் படத்திற்குப் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்கள் அதிகம் இல்லை. ஆனால் கபாலி படத்தில் பஞ்ச் டயலாக்கே அரசியல்தான் எப்படி கன்வின்ஸ் செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், இந்த கதைக்கு அரசியல் பஞ்ச் வசனங்களை தேவை. அவரை கூல் ஆக ஒத்துக்கொண்டு பேசி ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் பேசிய வசனங்கள் எல்லாம் முழு மனதுடன் வந்ததுதான் என்றார்.

ரஜினிக்காக காம்பரமைஸ் செய்தவர்கள் தான் அதிகம். இந்த படத்தில் இயக்குநரின் முத்திரை தெரிந்தது எப்படி? நாம வேற ஏதாவது செய்யணும் என்றுதான் கேட்டார். படம் பார்த்து முடித்து விட்டு இது முழுக்க முழுக்க ரஞ்சித் படம் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

படத்தின் கிளைமேக்ஸை இப்படி வைக்கச் சொன்னதே ரஜினிதான். அமெரிக்காவில் இருந்து பேசி என்னை கன்வின்ஸ் செய்தார். என்னை சுதந்திரமாக விட்டார். உலகம் முழுவதும் ஹிட். 30 நாடுகளில் படம் வெளியாகி உள்ளது. எதிர்மறையான விமர்சனங்கள் சுயஜாதி பெருமையை பேசவில்லை. ஒட்டுமொத்த மானுட பிரச்சினையை பேசுவதுதான். என்னை ஆள்பவனிடம் இருந்துதான் விடுதலை கேட்கிறேன்.

தலித் சமூகத்தில் அம்பேத்கர் பிறக்க வேண்டும் என்பதில்லை. அம்பேத்கர் உயர் சமூகத்தில் பிறக்க வேண்டும். புத்தர், அம்பேத்கர் குறியீடுகள், விவேகானந்தர் இதுபோன்ற குறியீடுகள் ஏன்? என்ற கேள்விக்கு சிரிப்பு பதிலாக கிடைக்கிறது. என்னால முடிஞ்ச அளவிற்கு சில விசயங்களை நான் பேசியிருக்கிறேன். மலேசியாவில் நிறைய வீடுகளில் விவேகானந்தர் படம் இருந்தது. எனவே விவேகானந்தர் படம் வைத்தேன் என்கிறார்.

மலேசியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையில்லாத சிக்கல் உருவாகக்கூடாது என்றுதான் நிறைய விசயங்களை இப்படத்தில் நான் பேசவில்லை.

நகைச்சுவை என்பதை வேண்டும் என்றே தவிர்த்து விட்டீர்களா? என்ற கேள்விக்கு, கதைக்கு நகைச்சுவை தேவையில்லை எனவே அதை வைக்கவில்லை. சில கேரக்டர்களை வைக்க வேண்டும். அதற்கு அவசியமில்லாமல் போனது. கதைக்கு தேவைப்பட்டால் வைத்திருப்போம் என்றார் ரஞ்சித்.

படத்தில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகம் இருப்பதாக விமர்சனம் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் வன்முறை அதிகம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இது எதார்த்தத்திற்கு மீறியதுதான். கதையின் சுவாரஸ்யத்திற்கான வைத்தேன் என்றார்.

ரஜினியிடம் கதையைக் கூறியதுமே ஐந்து காரணங்களுக்காக உடனே ஒத்துக் கொண்டார். முதலில் வயது. தன்னை வயதானவராக நடிக்க வைக்கப் போவதாக கூறியது அவருக்குப் பிடித்திருந்தது. இந்த வயதிலேயே நடிக்க வேண்டும் என்றுதான் ரஜினி கூறினார். பாட்டு, டான்ஸ் இல்லை. வழக்கமான சண்டை இல்லை இதுபோன்ற காரணங்களுக்காக ஒத்துக்கொண்டார் ரஜினி.

கறுப்பை அள்ளி உடம்பு முழுக்க பூசிக்கணும் என்று வெள்ளையான நிறம் கொண்ட கதாநாயகி பேசிய வசனம் பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன ரஞ்சித், கறுப்பு என்பது தமிழரின் நிறம் எனவே இந்த வசனத்தை வைத்தேன் என்றார்.

மலேசியாவில் கபாலி சரணடைந்தார் என்ற கார்டு போட்டு மலேசியாவில் முடித்திருப்போம். அதற்கு அங்குள்ள சென்சார் அப்படிக் கூறினார்கள். எனவே அங்கு மட்டும் மாற்றினோம். மலேசியா தவிர தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுக்க ஒரே கிளைமேக்ஸதான். இப்படத்தின் க்ளைமாஸ் காட்சியின் போது திரையரங்கில் ஒரு அமைதி இருந்தது. அப்படித் தான் இருக்க வேண்டும் என நான் இக்கதை எழுதும் போதே நினைத்தேன்.

கபாலியில் இருக்கும் சிந்தனைகள் அனைத்துமே சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான். இப்படத்தில் பேசப்பட்டு இருக்கும் சிந்தனைகள் அனைத்துமே சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான். இந்த சமூகம் மாறுவதற்கு மேலும் சில விஷயங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் அனைத்து தரப்பு படங்களையுமே பார்ப்பார்கள்.

கபாலி போல தொடர்ந்து படம் எடுப்பேன். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைச் சொல்லும் படங்களைத் தொடர்ந்து எடுப்பேன். மக்களின் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும். எனவே தொடர்ந்து செயல்படுவேன்.

என் மீதான தனி நபர் விமர்சனமும், காழ்ப்புணர்ச்சி கொண்ட வசைகளும் நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை எனக்கு உணர்த்துகின்றன.

தலித்துகளின் பிரச்சினைகள் நிற்கவில்லை. ரோஹித் வெமுலா ஏன் சாக வேண்டும். குஜராத்தில் மாட்டுத் தோல் வைத்திருந்த தலித்துகளை அடித்துள்ளனர். இது எல்லாம்தான் வன்முறையின் உச்சம். எனக்கு எந்த பாரம்பரியமும் கிடையாது. கலாச்சாரமும் கிடையாது, பாரம்பரிய பின்னணியும் கிடையாது. இதுதான் நான்… இப்படித்தான் என் படங்கள் இருக்கும், மகிழ்ச்சி என்று முடித்தார் பா. ரஞ்சித்.

tamil.oneindia.com