மோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ புகார்

aravaind_kejriwalடெல்லி: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை கொலைகூட செய்துவிடலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திடுக்கிடும் குற்றச்சாட்டுடன் வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு எதிராக அண்மைக் காலமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று உச்சகட்டமாக தன்னை கொலை செய்யும் அளவுக்கு மோடி விரக்தியில் இருக்கிறார் என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 9 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளுக்கு பின்னால் மோடி இருக்கிறார்.

மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னையும் என்னுடைய கட்சியினரையும் அரசியல் பழிவாங்கலுக்காக கொலை செய்யவும் கூடும். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மோடியால் சிறைக்கும் அனுப்பப் படலாம். சிறைக்கு செல்வது என்பது சிறிய தியாகம்தான்.

இதைவிட மிகப் பெரிய சதி நடக்கும்போது நீங்கள் உங்கள் உயிரிழை இழக்கும் உச்சகட்ட தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். பஞ்சாப், குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதால் பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த விரக்தியில் இருக்கிறார்.

எங்கள் மீது உங்களது அரசு இயந்திரங்களை இடைவிடாமல் ஏவிக் கொண்டிருக்கிறீர்கள். சிபிஐ, டெல்லி போலீஸ், இப்போது வருமான வரித்துறை என அனைத்தும் ஏவப்படுகிறது.

இதுவரை 10 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். எங்களது எம்.பி. பகவத் மானை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மோடி… இதற்கெல்லாம் நாங்கள் அச்சப்பட மாட்டோம். பிரச்சனைகளில் இருந்து காங்கிரஸைப் போல ஆம் ஆத்மி கட்சியினர் பின்வாங்கமாட்டோம். ஏனெனில் ஆம் ஆத்மியினர் ஊழலில் சிக்காதவர்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எவர் மீதும் எந்த ஒரு ஊழல் வழக்குமே இல்லை என நீள்கிறது இந்த வீடியோ. ஒரு மாநில முதல்வர், நாட்டின் பிரதமர் மீது கொலை முயற்சி பழியை சுமத்தியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியை சைக்கோ எனவும் கேஜ்ரிவால் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: