லக்னோ: 15 ரூபாய் கடன் பாக்கியை தராததால் கூலித் தொழில் செய்யும் தலித் தம்பதியினரை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரியைச் சேர்ந்தவர் அசோக் மிஸ்ரா. மளிகை கடை நடத்தி வரும் இவரிடம், தலித் தம்பதியினர் 15 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் தலித் தம்பதியினர் வேலைக்கு செல்லும் போது அவர்களை மறித்த, அசோக் மிஸ்ரா 15 ரூபாய் கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அருகிலிருந்த கோடாரியை எடுத்து, தலித் தம்பதியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அசோக் தலைமறைவாகியுள்ளார். அசோக் மிஸ்ரா குறித்து, கிராம மக்கள் அளித்த தகவலின்படி போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது எஸ்/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக கூறி, விலங்கின ஆர்வலர்கள் அவர்களை நடுவீதியில் நிற்கவைத்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.