வேலூர்: பாலாற்றில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனிவாசன் என்ற சீனுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சீனிவாசன் உடலுக்கு ஏராளமான விவசாயிகள் அஞ்சலி செலுத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயிலை ஒட்டி பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நி லையில், ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் புல்லூர் தடுப்பணையில் 12 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.
தடுப்பணை யை உயர்த்தாமல் இருந்திருந் தால், தற்போது தேங்கியுள்ள மழை நீர் தமிழக பாலாற்றுக்கு வந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். ஆந்திர அரசின் நடவடிக்கையால் தமிழக மக்க ளுக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டதே என வேலூர் மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தடுப்பணை யில் தேங்கிய நீரில் வாணியம் பாடியைச் சேர்ந்த விவசாயி குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனு(46). இவர் நேற்று மாலை 5.30 மணிக்கு புல்லூர் பாலாற்றுப் பகுதிக்கு வந்தார். அப்போது 12 அடி வரை நீர் நிரம்பியிருப்ப தைப் பார்த்து வேதனையடைந்த அவர், மேற்கு பக்கமாக திரும்பி, சூரியன் மறைவதைப் பார்த்து இரு கை கூப்பி வணங்கியபடி தடுப் பணையில் குதித்துள்ளார்.
இதையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் சீனு நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து, ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி போலீஸா ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த குப்பம் போலீசார், சீனு உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சீனுவின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கண்டனம்
பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டியதை தமிழக அரசு தடுக்கவில்லை என பாலாறு விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் வாணியம்பாடி வரை நீர் வந்து சேர்ந்து 7 ஏரிகள் நிரம்பியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பாலாற்று நீரை நம்பி தமிழகத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி நடைபெறுகிறது என்றும் விவசாயிகள் கூறினர்.
கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டும் பள்ளத்தூர் கால்வாய்க்கு நீர் வரவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அணை நிரம்பிய பிறகும் தமது நிலத்திற்கு நீர் வராததால் விவசாயி சீனு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீறு தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயி சீனிவாசன் உடலை மீ்ட்பதில் ஆந்திரா தீயணைப்புத்துறை மற்றும் அம்மாநில அரசு அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர். சர்ச்சைக்குரிய இந்த தடுப்பணை ஆந்திரா பகுதியில் உள்ளதால் சீனு உடலை மீட்க தமிழக தீயணைப்புப் படையினர் மறுத்தாகவும் கூறப்பட்டது. தமிழக விவசாயி என்பதால் ஆந்திர மாநில தீயணைப்புப் படையினர் மெத்தனமாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே விவசாயி சீனுவின் உடலை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் சீனிவாசன் உடல் மீட்கப்பட்டது. தற்போது சீனு என்ற சீனிவாசனின் உடலுக்கு ஏராளமான விவசாயிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.