விவசாயி தற்கொலை! தடுக்கி விழுந்தார் என்கிறது அரசு? தமிழகத்தில் பரபரப்பு

palarபாலாற்றில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனிவாசனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயிலை ஒட்டி பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்திக் கட்டியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன்(வயது 46) அணையில் விழுந்து உயிரிழந்தார்.

நேற்று மாலை 5.30 மணிக்கு புல்லூர் பாலாற்றுப் பகுதிக்கு வந்த சீனிவாசன், அணையின் நீர் மட்டத்தை பார்த்து வேதனையடைந்துள்ளார், மேற்கு பக்கமாக திரும்பி, சூரியன் மறைவதைப் பார்த்து இரு கை கூப்பி வணங்கியபடி தடுப்பணையில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் சீனுவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர், எனினும் தமிழக விவசாயி என்பதால் ஆந்திரா அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளனர்.

மேலும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களையும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர், வீடியோ காட்சிகளை பதிவு செய்யக்கூடாது எனவும் மிரட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று விவசாயியின் உடலை மீட்டனர், இவரது உடலுக்கு ஏராளமான விவசாயிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு தடுக்கவில்லை: வெங்கடேசன் கண்டனம்

விவசாயிகள் கண்டனம் பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டியதை தமிழக அரசு தடுக்கவில்லை என பாலாறு விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் வாணியம்பாடி வரை நீர் வந்து சேர்ந்து 7 ஏரிகள் நிரம்பியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாலாற்று நீரை நம்பி தமிழகத்தில் 3.5 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி நடைபெறுகிறது, கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் பள்ளத்தூர் கால்வாய்க்கு நீர் வரவில்லை என்றால் இனிமேல் எப்படி வரும் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெயலலிதா

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த விவசாயி சீனிவாசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பாலாறு தடுப்பணை விவகாரத்தில் ஆந்திராவுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆந்திரா அரசின் அடாவடியால் தமிழக விவசாயி தற்கொலை: பண்ருட்டி தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேதனையின் வெளிப்பாடுதான் சீனிவாசனின் உயிர் தற்கொடையாகும்.

தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து சிறிதுகூட கவலைப்படாமல் மத்திய அரசும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆந்திரா அரசு 5 அடியாக குறைக்காவிட்டால், தமிழக விவசாயிகளே அந்த தடுப்பணையை தகர்க்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் குடும்பத்தாருக்கு ஆந்திரா அரசு ரூ50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; சீனிவாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தின் அடாவடித்தனத்தால் பாலாறு பாழாகும் நிலை ஆகிவிட்டதே என்ற வேதனையில், வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீனு புல்லூர் தடுப்பு அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

பாலாற்றின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளின் கொந்தளிப்பான மனநிலைக்கு, விவசாயி சீனுவின் மரணம் ஒரு சான்று ஆகும். விவசாயி சீனுவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், தமிழக அரசு இருபது இலட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் முந்தி நிற்கும் மத்திய பாஜக அரசு, பாலாற்றில் தடுப்பணை அமைக்கும் ஆந்திராவின் நடவடிக்கைகளை எப்போதும்போல வேடிக்கைப் பார்த்து வருவதும் கண்டிக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கைத் தூரிதப்படுத்தி பாலாற்றில் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: