அட உண்மைதாங்க.. 70 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.251 ஸ்மார்ட் போன்களை டெலிவரி செய்த ரிங்கிங் பெல்ஸ்

freedom-251டெல்லி: உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போன் என புகழப்படும் ரிங்கிங் பெல்ஸ், மேலும் 65 ஆயிரம் செல்போன்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், சாத்தியமில்லை என கூறப்பட்ட ஒன்றை சாத்தியமாக்கி காண்பித்துள்ளது அந்த நிறுவனம். ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருகிறோம், முன்பதிவு செய்யுங்கள் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கூறியபோது அது ஏமாற்றுவேலை என்றுதான் பலரும் நினைத்தனர். அரசாங்கமும் கெடுபிடி செய்தது. இதனால் சற்று காலம் சத்தமின்றி இருந்த அந்த நிறுவனம், தடைகளை தாண்டி தற்போது நமது இல்லங்களின் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டது.

ஆம்.. சில தினங்கள் முன்புதான், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை ரூ.251 விலையில் டோர் டெலிவரி செய்த இந்த நிறுவனம், தற்போது மேலும் 65 ஆயிரம் போன்களை சப்ளை செய்யும் பணியை ஆரம்பித்துள்ளதாம். இதன்மூலம், ரூ.251க்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டுள்ளது.

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடுத்தர, ஏழை மக்களும் ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்பது தங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளது.

கேஸ் ஆன் டெலிவரி எனப்படும், பொருளை பெற்றபிறகு பணத்தை செலுத்தும் வசதி உள்ளதால், இதில் பண மோசடிக்கு வாய்ப்பில்லை.

மேற்கு வங்கம், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், பிகார், உத்தராகண்ட், டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் போன் சப்ளை ஆரம்பித்துள்ளதாம்.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வானவர்களுக்கு இந்த போனை பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எஞ்சிய வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் போன் அனுப்பப்படும் என தெரிகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவில் செல்போன் தயாரிக்கப்படுவதாகவும், எனவே மலிவு விலையில் செல்போனை தர முடிகிறது என்றும் அந்த நிறுவனம் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: