ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: பரிசீலிக்க மத்திய அரசு உறுதி

  • ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது.

தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு உத்தரவாதம் அளித்திருந்து. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் சிறப்பு அந்தஸ்து வாக்குறுதியை அளித்தது.

இந்த நிலையில், அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுமாறு ஆந்திர அரசியல் தலைவர்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதோடு மட்டுமன்றி நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை ஆந்திர எம்.பி.க்கள் எழுப்பி வருகின்றனர்.

மக்களவை அலுவல்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதன் காரணமாக அவையில் நீண்ட நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை இரு முறை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

அதன் பிறகு அலுவல்கள் தொடங்கியதும், மீண்டும் ஆந்திர எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.

அப்போது தலையிட்டுப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காண முயலும்’ என்று உறுதியளித்தார்.

ஆந்திர எம்.பி.க்கள் அந்த உத்தரவாதத்தை ஏற்றபோதிலும், அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு வலியுறுத்தி கூச்சலிட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, “நிதியமைச்சரின் வாக்குறுதியை ஏற்று அவை அலுவல்களை சுமுகமாக நடத்த விடுங்கள்’ என்றார்.

அதே கருத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமாரும் வலியுறுத்தினார். அதன் பிறகு அவர் மேலும் பேசியதாவது:

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஆந்திர மக்களின் நலன் மற்றும் விருப்பத்துக்கு நாங்கள் துணை நிற்போம். அதேவேளையில், இந்த விவகாரத்தில் முடிவுகளை எடுக்கவும், செயல்படுத்தவும் மத்திய அரசுக்கு உரிய கால அவகாசம் கொடுங்கள் என்றார் அனந்த் குமார். இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.

முழு அடைப்பால் பாதிப்பு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அந்த மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவளித்திருந்தன.

கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை போலீஸார் கைது செய்தனர்.

கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் மாநில அரசுப் பேருந்துகள் பெரும்பாலானவை இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் தனியார் அலுவலகங்களும் இயங்கவில்லை.

இதனிடையே, ஆந்திரப் பிரதேச அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திரண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள், சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், அந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதுதொடர்பாக 45-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மேலவை உறுப்பினர் வீரபத்ர சாமியும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

முழு அடைப்புப் போராட்டத்தில் சுவாரஸ்ய நிகழ்வாக, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ நரேந்திராவும் சிறப்பு அந்தஸ்து கோரி ஆச்சார்யா என்.ஜி.ரங்காவின் சிலை அருகே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.

-http://www.dinamani.com

TAGS: