தமிழை வழக்காடும் மொழியாக்க நடவடிக்கை

chennai high courtஉயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ரவிச்சந்திரன் (எழும்பூர்) செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, உயர் நீதிமன்றத்தில் தமிழை, வழக்காடும் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்குவதற்கான அறிவிப்பு 2001-ஆம் ஆண்டு ஆளுநர் உரையிலேயே குறிப்பிடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசானது இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வின் முன் 2012-இல் வைத்தது. இந்தக் கோரிக்கை 2013-ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக, இந்தக் கோரிக்கையை மத்திய அரசின் அலுவல் ஆட்சி மொழித் துறை மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வின் முன் கோரிக்கை வைக்க நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2015-ஆம் ஆண்டு உறுதி அளித்தது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று முறை நினைவூட்டல் கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் சி.வி.சண்முகம்.

-http://www.dinamani.com

TAGS: