ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது.

மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அ.இ.அ.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு தாங்கள் தெரிவித்த ஆட்சேபணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

122வது அரசியல் சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்தபோது, அரசின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த மசோதா நிறைவேற்றத்தால், நாடாளுமன்றமோ அல்லது மாநிலங்களோ தங்கள் அதிகாரங்களை இழந்துவிடவில்லை என்றார்.

ஜி.எஸ்.டி மூலம் இறையாண்மை என்பது ஒன்று குவிக்கப்பட்ட அனைவராலும் பகிரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரி அமலாகும் என்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சில அம்சங்களின் மீதான வரி குறையும் என்றும், ஆபரணத் தங்கம் போன்ற சில பொருட்களின் மீதான வரி உயரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மசோதாவை இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்திப் பேசிய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, “ஜிஎஸ்டி வரியைப் பொருத்தவரை, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், மது, பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. பெட்ரோலியப் பொருட்களைப் பொருத்தவரை, அவை இருந்தாலும், பூஜ்யம் சதவீதம் வரியே இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், ஜி.எஸ்டி கவுன்சில் அனுமதியளித்தால்தான் பெட்ரோலியப் பொருட்களை வரி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்றும், அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிக்கும் உரிமை மாநிலங்களுக்கும் ஒரு பங்கு உரிமை மத்திய அரசுக்கும் வழங்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

விவாதத்தின் நிறைவில் பேசிய அவர், வரிகள் மீது எந்தவிதமான பெரிய தாக்கமும் இருக்காது என்று உறுதியளித்தார்.

முன்னதாக, இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் பிரதிநிதியும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், “இந்த மசோதாவை 2005-ம் ஆண்டு முதன் முதலாக கொண்டுவர வேண்டும் என்று யோசனை சொன்னது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். அதை நிதியமைச்சர் அங்கீகரித்த்து குறித்து மகிழ்ச்சி. தேசிய அளவிலான வாட் வரி அல்லது மத்திய, மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி வரி தேவை என்று எனது உரையில் அப்போது குறிப்பிட்டேன்” என்றார் சிதம்பரம்.

எங்கள் அரசு எதிர்க்கட்சி ஆதரவுடன் அதை நிறைவேற்ற முயன்று தோல்வியடைந்துவிட்டோம். இப்போது, எங்கள் ஆதரவு இல்லாமல் நிறைவேற்ற முயன்று இந்த அரசும் தோற்றுவிட்டது என்றார் சிதம்பரம்.

அதிமுக வெளிநடப்புஇந்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

“இந்த சட்டத்தைக் கொண்டுர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது” என்றார்.

மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்புச் செய்வதாக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்த புதிய வரி ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது விதித்திருந்த மறைமுக வரிகள் அனைத்தையும் ரத்து செய்து , புதிய ஒற்றை வரிமுறையை அறிமுகப்படுத்தும். இது இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தைத் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

-http://www.bbc.com

TAGS: