தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி – சட்டசபையில் ஜெ., திட்டவட்டம்

jayalalitha854சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படுவது உறுதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன். மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அதிமுக உறுதியாக உள்ளதாக கூறினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த போது அதனை விலக்கியது திமுக தான். இது இன்றைய தலைமுறைக்கு தெரியாது. அதனால் தான் அமைச்சர் விளக்கினார் என தெரிவித்தார்.

முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக.,வினர் அமளியில் ஈடுபட்டனர். மதுவிலக்கு குறித்த முதல்வரின் பேச்சுக்கு பதிலளித்து பேச வாய்ப்பு கேட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் தனபால், அமைச்சர் பதிலுரையின் போது பேசுவதற்கு அனுமதி அளிக்க முடியாது. பதிலுரை முடிந்தது பேச வாய்ப்பு தரப்படும் என்றார். இதனை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள், மதுவிலக்கு குறித்த முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க மறுத்த சபாநாயகரை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவையில் தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, இப்பொழுது எல்லாம் எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் இரண்டு வார்த்தைகளை சொன்னால் போதும் ஒன்று கச்சத்தீவு, இன்னொன்று பூரண மதுவிலக்கு. இந்த இரண்டை பற்றி சொன்னாலே போதும் பதில் சொல்ல முடியாமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து விடுகின்றனர் என்று கூறினார்.

tamil.oneindia.com

TAGS: