டெல்லி: பாலியல் பலாத்காரக் கொடுமைகளைப் புரியும் நபர்களை அவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், பெண்களை விட்டே சுட்டுக கொல்ல வேண்டும் என்று டெல்லி ஆம் ஆத்மி அரசில் கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ரா ஆவேசமாக கூறியுள்ளார்.
கோர்ட் வேண்டாம் விசாரணை வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்களிடம் துப்பாக்கியைக் கொடுங்கள். அவர்கள் சுட்டுக் கொல்லட்டும். அதுதான் சரியான தண்டனை என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கபில் மிஸ்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், புலந்த்சாகரில் தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் மிகக் கொடுமையானது. இதுபோன்ற செயல்கள் நாட்டில் எங்கும், யாருக்கும் நடக்கலாம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 450 சிறுமிகள் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
நான் மரண தண்டனைக்கு எதிரானவன்தான். மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவன்தான். ஆனால் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களைப் பார்க்கும்போது, இதுபோன்ற குற்றவாளிகளை பகிரங்கமாகக் கொல்ல சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் இவர்கள் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் துப்பாக்கியைக் கொடுத்து பயிற்சி அளித்து அவர்களை விட்டே சுட்டுக கொல்ல வேண்டும். பாலியல் பலாத்காரம் செய்வோரையும். செய்ய முயற்சிப்போரையும் இவர்களே சுட்டுக் கொல்லட்டும். மைனர் வயது என்றெல்லாம் இதில் சட்ட ரீதியாக பார்க்கக் கூடாது. ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்ய வயது இடம் தரும்போது அவனுக்கு கடும் தண்டனை கொடுப்பதும் நியாயமானதுதான் என்று கூறியுள்ளார் மிஸ்ரா.