பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு

 

rajnath_singh_001பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீரில் விடுதலைக்கான புதிய அலை உருவாகி உள்ளது. சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நமது சவால்கள் பொதுவாக உள்ளன. நமது பயங்களும், கவலைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தகவல்களை மட்டுமின்றி பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத இயக்கத்திற்கு மட்டும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர் மற்றும் நாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத்தில் நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என்று பேதம் பார்க்க கூடாது. பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளே, பயங்கரவாதிகளை தியாகிகள் போன்று சித்தரிக்க கூடாது. பயங்கரவாத சம்பவத்தில் வெறுமனே கண்டனம் மட்டும் தெரிவிப்பது போதுமானது கிடையாது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும், ஊக்குவிக்கும் அவர்களுக்கு பாதுகாப்பு உறைவிடம் கொடுக்கும் மற்றும் பிற உதவிகளை கொடுப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றார்.

ராஜ்நாத் சிங்கின் பேச்சை ஒளிபரப்பு செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் தனது உரையை நிறைவு செய்த ராஜ்நாத் சிங், சார்க் மாநாட்டின் மதிய விருந்தில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறப்பட்டார். டெல்லி வந்தடைந்த அவர், பிரதமர் மோடியை சந்தித்து மாநாட்டு விஷயங்கள் குறித்து பேசினார்.

-http://www.nakkheeran.in
TAGS: