திருப்பதி கோயிலுக்கு சென்ற 32 தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்.. செம்மரம் வெட்ட வந்ததாக வழக்கு

venkateswaraதிருப்பதி: செம்மரம் வெட்ட சென்றதாக தமிழர்கள் 32 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில் செம்மரம் வெட்டும் கும்பல் செல்வதாக ஆந்திர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பயணிகளை கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட போலீஸார் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு சென்றனர். நேற்றிரவு சுமார் 7 மணியளவில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ரயிலில் இருந்து 32-தமிழர்களை போலீஸார் இறக்கினர். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாத போலீஸார், சந்தேகத்தின் பேரில் செம் மரங்களை வெட்ட வந்தவர்கள் என்று கூறி கைது செய்தனர்.

ஆந்திர போலீஸ் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள், நாங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தான் வந்ததாக தெரிவித்தார்களாம். ஆனால், இதை ஏற்க மறுத்த ஆந்திர போலீஸார் வலுக்கட்டாயமாக 32 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

andhra-policeகைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, திருவள்ளூர் மவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 32 பேரையும் திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் வைத்து தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், அவர்களிடம் இருந்து அரிசி, ரம்பம், கோடாரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிடிபட்டபோது அவர்களிடம் எந்த பொருட்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் மீதும் செம்மரம் வெட்டுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, ஆந்திர அரசு செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கியது. மேலும், வனப்பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டதோடு, ஆளிள்ளா விமானம் மூலமாகவும் செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: