சென்னை: செம்மரம் வெட்டச் சென்றாக கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்ட சென்றதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 32 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என 3 இடங்களில் தனித்தனியாக விசாரனை நடத்தப்பட்டது.
இதனிடையே செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 32 தமிழர்களும் திருப்பதி 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 32 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆந்திர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழகத்தின் சார்பில் 2 வழக்கறிஞர்களை ஆந்திரா அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரச்சனையில் ஆந்திர முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.