இந்த தமிழர்களுக்காகவும் பேசுவோம்!

tamilnadu_refugees_001‘2016 , ஆகஸ்ட் முதலாம் திகதி, அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்’ என்கிற செய்தியை இணையத்தில் வாசித்த போது எனக்கு வேடர் காலனி நினைவிற்கு வந்தது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் வேடர் காலனி. தமிழகத்தில் இருக்கும் 107 அகதிகள் முகாம்களில் ஒன்றுதான் வேடர் காலனி.

ஒரு குக்கிராமத்தை போல தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்த வெளி சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்.

எனவே அறுபது வீடுகள். எல்லாம் அலுமினிய தகரத்தால் ஆனவை. அனைத்தும் ஐந்து ஆறு தெருக்களில் இறுக்கமாக அமைக்கப்பட்டு, அதற்குள்ளாகவே அந்த கிராமத்தின் எல்லையும் அம்மக்களின் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது.

அங்கு மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்கிற பெயின்டர் எங்களை அவ்வூருக்குள் அழைத்துச் சென்றார்.

மணி அண்ணனுக்கு முப்பத்தி ஐந்து வயது. இங்கு வந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. அவரிடம் ஈழத்தை பற்றிய நினைவு எதுவும் மிஞ்சி இருக்கவில்லை.

அவருக்கு திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறாரகள். அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கூட, அவரின் பெண் குழந்தைதான் எங்களுக்கு குளிர்பானம் தந்தாள்.

அவள் ஈழத்தை வரைபடத்தில் தவிர வேறு எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மணி அண்ணன் பன்னிரெண்டாவது வரை படித்திருந்தார்.

கோயம்புத்தூரில் பெயின்டர் வேலை. தினம் காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் , மாலை ஆறு மணிக்குள் முகாமில் இருக்க வேண்டும்.

ஒரு வேளை சென்னை போன்ற அயல் ஊர்களில் வேலை பார்க்க வேண்டும் என்றால், ஒரு கடிதம் எழுதி அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பெற வேண்டும்.

பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவர் மட்டுமல்ல, அகதிகள் முகாமில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் கட்டட வேலைக்கும் பெயின்டர் வேலைக்கும்தான் செல்கிறார்கள்.

கண்காணிப்பின் வலி:

மணி சொன்னார், ” ஆரு என்ன படிச்சிருந்தாலும் சரி , இங்கன கட்டட வேலதான் பாக்கணும். ரகுனு ஒருத்தரு இருந்தாரு டபிள் MA முடிச்சிருந்தாரு. ஆனாலும் பெயின்டர் வேலதான்.

அதனாலயே மனசு வெறுத்து போயி மென்டல் ஆகிட்டாரு” .இங்கே முகாமிலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது.

-http://www.tamilwin.com

TAGS: