சென்னை: டெல்லி, திருச்சி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளை நிறுத்தும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு, அவை இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆட்குறைப்பு என்ற பெயரில் மிகவும் அநியாயமான முடிவை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கிறது.
தலைநகர் டெல்லி, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சிக்கல் பற்றி முன்னுக்குப்பின் முரணாக வெளியாகி வரும் செய்திகள் குழப்பத்தை போக்குவதற்கு பதிலாக அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்த நாள் முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் முக்கியமானவை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதும், அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு செய்வதும் தான்.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதன் 25-ம் ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், வெள்ளி விழா பரிசாக செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் பல கிளை அலுவலகங்களை மூட மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.
அரசின் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகள் தான். உதாரணமாக டெல்லி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை 7.15 மணி, பிற்பகல் 12.40 மணி, இரவு 7.15 மணி என மூன்று முறை 10 நிமிட தமிழ் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோல், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிற்பகல் 1.45 மணிக்கு 10 நிமிட தமிழ் செய்தி அறிக்கையும், பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை செய்திச் சுருக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்த செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
இந்த வானொலி நிலையங்களின் செய்திப் பிரிவுகளில் பணியாற்றி வந்த செய்தித்துறை அதிகாரிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், டெல்லி வானொலி நிலைய தலைமை அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த பிற மொழி செய்தி அறிக்கைகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. தில்லியிலிருந்து தமிழ், மலையாளம், ஒதியா, காஷ்மீரி உட்பட 14 பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலம், இந்தியிலும் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வந்த நிலையில், ஆங்கிலம், இந்தி, காஷ்மீரி ஆகிய 3 மொழிகள் தவிர மீதமுள்ள 13 மண்டல மொழிகளில் ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் நிறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம் மத்திய அரசு எதை சாதிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
இந்தியாவில் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் செய்தித் தொலைக்காட்சிகள் பெருகிவிட்ட போதிலும் வானொலி நிலையங்கள் வழங்கும் செய்திகளுக்கு இன்னும் தனி மரியாதை உள்ளது. வானொலி செய்திகளுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் நம்பகத் தன்மை உள்ளது. தனியார் செய்தித் தொலைக்காட்சிகளின் பரவல் நகரங்கள் மற்றும் பெரிய கிராமங்களுடன் நின்று விட்ட நிலையில், குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள் தான்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் ‘மனம் திறந்து’ பேசும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சிகளிலும், தூர்தர்ஷனிலும் நடத்தாமல் வானொலியில் நடத்துவதில் இருந்தே வானொலியின் சிறப்பை உணரலாம். அதிலும் குறிப்பாக டெல்லி தமிழ் வானொலி செய்திக்கு தனிச் சிறப்பு உண்டு.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா விடுதலை அடைந்த செய்தியை இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் நேயர்களுக்கு முதலில் தெரிவித்தது டெல்லி வானொலியில் அன்று காலை 5.30 மணிக்கு ஒலிபரப்பட்ட தமிழ் செய்திகள் தான். இவ்வளவு சிறப்பு மிக்க தமிழ் செய்திப் பிரிவை மூடும் முடிவு கண்டிக்கத்தக்கது; இதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
வானொலி செய்திகள் மூடப்படுவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுவதாக பிரசார் பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது. வானொலி நிலையங்களை நடத்துவது மட்டுமே பிரசார் பாரதியின் பொறுப்பு ஆகும். செய்திப்பிரிவுகள் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் வருகின்றன.
செய்திப்பிரிவுகள் மூடப்பட்டதாக மத்திய அரசே அறிவித்துள்ள நிலையில், அதை பிரசார்பாரதியால் எவ்வாறு மாற்ற முடியும் என்பது தெரியவில்லை. பிரசார்பாரதி அமைப்பு அளித்துள்ள விளக்கத்தால் குழப்பம் விலகுவதற்கு பதிலாகஅதிகரித்திருக்கிறது. மற்றொருபுறம், தில்லி மற்றும் திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் செய்தி அறிக்கைகளை சென்னையில் உள்ள மண்டல செய்திப் பிரிவிலிருந்து ஒலிபரப்பும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், சென்னை மண்டல செய்திப் பிரிவிலிருந்து இணை இயக்குனர் பணியிடம் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் இது சாத்தியமா? எனத் தெரியவில்லை. ஒருவேளை அந்த செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பப்பட்டாலும் அதன் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில், தில்லியிலிருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளில் தேசிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதேபோல், திருச்சியில் இருந்து ஒலிபரப்பப்படும் செய்திகளில் விவசாயம், மீன்வளம் குறித்த செய்திகளுக்கும், காவிரி பாசன மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும் போது தேசிய, உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காது.
எனவே, டெல்லி, திருச்சி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளை நிறுத்தும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு, அவை இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மேலும், பத்திரிகை தகவல் அலுவலக மதுரைக் கிளை, செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் சென்னைக் கிளை ஆகியவற்றை மூடும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஆளும் திருட்டிக்கு வடுக கூட்டத்துக்கு சிறிதும் கவலை இல்லை…முடிந்தளவு சுரிட்டிக்கத்தான் புத்திவரும் …
மண்ணின் மைந்தனுக்குத்தான் அந்தப்பற்று இயல்பாகவே வரும் ..
மருத்துவர் வடுகளர்களுக்கு பெரிய சவால் ..அதனால் என்னவோ வடுக ஆரிய திருட்டுகூடடம் பாமாகாவை தடைசெய்யவேண்டும் என்று கொக்கரிக்கிறார்கள் ..