டெல்லியில் மரணித்தது மனித நேயம்: பலியானது உயிர்

இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார்.

அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம்.

இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித் தள்ளிய பிறகு வேன் ஓட்டுநர் வெளியே வந்து பாதிப்புக்குள்ளான நபரை பார்க்கிறார். பின்னர் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

பின்னர், அந்த வழியாக வந்த ஒருவர் இறுதியாக, அடிப்பட்டவரை அணுகுகிறார்.

அந்த நபரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, அவரிடமிருந்த கைப்பேசியை திருடிச் செல்கிறார்.

இரவுப்பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது சாலையில் விபத்துக்குள்ளான அந்த நபருக்கு உதவ யாருமின்றி, உயிரை விட நேர்ந்திருக்கிறது.

யாருமே உதவத் தயாராக இல்லாத, மனிதநேயமற்ற மனநிலை, இந்தியாவில் பெரும் விவாவதத்தைக் கிளப்பி உள்ளது. -BBC

இரக்கமற்ற ஓட்டுநர் இப்போது போலிஸ் பிடியில்

இந்த சம்பவம், நவீன இந்தியாவில் மனித உயிருக்கு இருக்கும் மரியாதை, மரத்துப் போன இரக்க குணம் குறித்தான விவாதத்தை தூண்டியுள்ளது.

விபத்தில் அடிப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்க்க உதவுவோருக்கு ஊக்கப்பரிசு வழங்கும் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

யார் அந்த ஓட்டுநர்?

பிரபல கம்பெனி ஒன்றில் பால் விநியோகஸ்தாராக செயல்பட்ட அந்த ஓட்டுநரின் பெயர் ராஜேஷ் குமார் குப்தா (25) என்று போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது சட்டத்தில் உள்ள தகுந்த குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், பாதிப்புக்குள்ளான நபரின் செல்போனை திருடிச் சென்றவரை அடையாளம் காண முயற்சித்து வருவதாக கூறியுள்ளனர்.

விபத்தில் பலியான நபரின் பெயர் மட்டிபூல் என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் கூறியுள்ளன.

அவர் பகல் நேரத்தில் ரிக்ஷா தொழிலாளியாகவும், இரவில் பாதுகாப்பு பணியாளராகவும் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளன.

இந்த விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வருத்தங்களை பலர் பதிவு செய்தனர். பலரும் டெல்லியை இரக்கமற்ற நகரம் என குறிப்பிட்டுள்ளனர்.

-BBC

TAGS: