காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு-சாலை மறியல்: ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

காவிரியில் தண்ணீர் பெற கோரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு-சாலை மறியல்: ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது

தஞ்சாவூர்:

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் காவிரியில் 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதனை கர்நாடகா முறைப்படி தராததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

சம்பா சாகுபடிக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

சம்பா சாகுபடி தொடங்கி விட்ட நிலையில் மேட்டூர் அணையில் 63 அடி தண்ணீர் தான் உள்ளது. நீர் வரத்தும் மிகவும் குறைவாக உள்ளது. குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணை திறப்பதற்கான சாத்தியம் உள்ளது.

எனவே இந்த ஆண்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்த வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மாதந்தோறும் கர்நாடக அரசு 70 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உடனடியாக அமைக்க வேண்டும்,

கர்நாடக அரசின் நீதிமன்ற அவமதிப்பை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் சாலை மறியலும், கடையடைப்பும் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்துக்கு தி.மு.க., த.மாகா., ம.தி.மு.க. இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. வணிகர் சங்க பேரவையும் தார்மீக ஆதரவு அளித்து இருந்தது.

அதன்படி இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், பாபநாசம், ஆடுதுறை, வல்லம் உள்ளிட்ட 100 இடங்களில் மறியல் நடைபெற்றது.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொது செயலாளர் துரை.மாணிக்கம் தலைமை தாங்கினார். மறியலில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், தப்பலாம் புலியூர், மாங்குடி, புலிவலம் உள்ளிட்ட 100 இடங்களில் மறியல் நடைபெற்றது.

திருவாரூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் பி.எஸ். மாசிலாமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாநில விவசாய அணிசெயலாளர் புலியூர் நாகராஜன், ம.தி.முக. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் மறியல் நடைபெற்றது. மயிலாடுதுறை, சீர்காழி, உள்ளிட்ட 100 இடங்களில் மறியல் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார் கோவில், மணல் மேடு, பட்டமங்கலம், உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருச்சி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் கலந்துகொண்டன.

திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் முன்பு திரண்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டு சம்பா சாகுபடியை அரசு உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து ரெயிலை மறிப்பதற்காக அங்கிருந்து ஊர்வலமாக திரண்டு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசன வசதி பெறும் பகுதிகளான அறந்தாங்கி, நாகுடி, சுப்பிரமணியபுரம், மேற்பனைக்காடு, திருவப்பாடி, மணமேல்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மேலும் நாகுடி உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமுல்படுத்தக்கோரி கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே விவசாயிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், தேசிய செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் மாதவன், செயலாளர்கள் சேகர், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் விவசாயிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தையொட்டி சிதம்பரத்தில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சிதம்பரம் நான்கு ரத வீதி, சபாநாயகர் தெரு, எஸ்.வி. கோவில் தெரு, வேணுகோபால் தெரு ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ் நிலையம், மார்க்கெட் உள்பட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

6 மாவட்டங்களிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கர்டநாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.maalaimalar.com

TAGS: