புவனேஸ்வர்: மருத்துவமனை வாகன வசதியை ஏற்படுத்தி தராததால் இறந்துபோன மனைவியை தோளில் தூக்கிப்போட்டு 10 கி.மீ நடந்து சென்ற கணவரின் படம் வைரலாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி. டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமன்கடி, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் 60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதியை செய்து தரவில்லை. பரம ஏழையான தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வசதியில்லை.
இதையடுத்து, மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, ஊருக்கு நடக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவரது மகளும் உடன் நடந்துவந்தார். சுமார் 10 கி.மீ தூரம் நடந்து சென்ற பிறகு, சில இளைஞர்களை இதை பார்த்து பரிதாபப்பட்டு, விசாரித்து விவரம் அறிந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்ததும், அமன்கடி இறுதி சடங்கிற்கு வேண்டிய நிதி உதவியை செய்வதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார். இந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.
கடந்த மே மாதம் இதேபோல ஒடிசாவில் ஒரு சம்பவம் நடந்தது. வாகனத்திற்கு பணமில்லாததால் ஏழைகள் சிலர் உறவுக்காரர் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தூக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
-http://tamil.oneindia.com
நாங்க செவ்வாய் கிரகத்திற்கு போக ராக்கெட் விடுவோம் ஆனால் பிணத்தைத் தூக்க ஆம்புலன்ஸ் விட மாட்டோம்.
முதலில் கலெக்டரை வேலையில் இருந்து தூக்க வேண்டும். அவர் சரியாக இருந்தால் மருத்துவமனை சரியாக இருக்கும். ஒரு கொசுறு செய்தி: சில ஆண்டுகளுக்கு முன் சரவாக் மாநிலத்தில் ஒரு ஏழைத் தாய் தனது 14 வயது குழந்தையை பத்து மைல் தூரம் தோளில் சுமந்து கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி மருத்துமனைக்குச் சென்றதாக டிவி 3 ரில் ஒளிபரப்பினார்கள். ஆக, ஏழை என்றால் இப்படித்தான் நடக்கும்!
இந்தியாவில் ஏதும் நடக்காது– மனிதாபிமானத்துக்கும் இந்தியர்களுக்கும் வெகு தூரம். இந்திய தொலைக்காட்சிகள் பார்த்தால் புரியும்–அதிலும் TIMES NOw -வை பார்த்தால் புரியும்-அங்கு தினசரி நடக்கும் அநியாயங்களை. எனக்கும் என்ன என்று சொல்ல தெரிய வில்லை–இப்படியும் ஈன ஜென்மங்கள்– ஆனால் பேச்சுக்கு மட்டும் அளவிருக்காது. என் மனம் கனக்கிறது. திரைப்படங்களில் வரும் காட்சிகள் எல்லாமே உண்மை தான்.
ஒரு திருத்தம்— கதாநாயகன் அநீதியை எதிரித்து போராடி வெற்றி பெறுவது மட்டும் அப்பட்ட பொய்.– அப்படி பட்ட கதாநாயகன் கிடையவே கிடையாது. ஊழல் எதிர்ப்பு திரைப்படங்கள் எத்தனை வந்தன– ஏதும் மாற்றம் வந்ததா? எல்லாம் ரத்தத்தில் ஊறிவிட்டது. எதற்கு எடுத்தாலும் துரதிருஷ்ட வசமானது துரதிருஷ்டவசமானது என்று சாக்கு போக்கு சொல்வதே அங்கு எப்போதும் நடக்கும்– இப்போதும் அதுவே– இதை எழுதும் போது இந்திய அமைச்சர் இப்படித்தான் பேசினான். சீ!