சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை… கட்டுமான பணிகளை தொடங்கியது கேரளா

amaravathiகோவை: தமிழகத்தில் எதிர்ப்பு நிலவும் நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதற்கு கேரளா முதல்கட்ட பணியை தொடங்கி உள்ளது. அணைக்கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது. பவானியின் துணை ஆறான சிறுவாணி ஆறு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிறது. அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் மேற்கு பகுதியில் பவானி ஆற்றுடன் சிறுவாணி ஆறு இணைகிறது.

இந்த ஆற்றின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த ஆற்றின் மூலம் வரும் நீர் 60 சதவீதம் குடிநீருக்காகவும், 40 சதவீதம் பாசன வசதிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு இப்புதிய அணைக்கான சுற்றுச் சூழல் ஆய்வை நடத்த கேரளாவுக்கு அனுமதி அளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவுக்கு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், தடுப்பணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள சித்தூர் மற்றும் சிறுவாணி ஆற்றங்கரையில் கட்டுமானப் பணிக்கான பொருட்களை கேரள அரசு குவித்து வருகிறது. அணை கட்ட ஆய்வு செய்வதற்கு மட்டும் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், உரிய அனுமதி பெறாமல் கேரள அரசு கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மதிமுக சார்பில் கேரளாவுக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. வரும் 3-ந் தேதியன்று கோவையில் கேரளாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.

tamil.oneindia.com

TAGS: