உச்சநீதிமன்றம் விளாசல்… தமிழகத்துக்கு காவிரியில் ரகசியமாக நீரை திறந்துவிட்ட கர்நாடகா

cauveryசென்னை: உச்சநீதிமன்றத்தின் காட்டமான உத்தரவால் தமிழகத்துக்கு காவிரி நீரை ரகசியமாக திறந்துவிட்டுள்ளது கர்நாடகா. காவிரியில் தற்போது 11,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23ந் தேதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு தரவேண்டிய 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். வாழு, வாழ விடு என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கர்நாடகாவுக்கு உத்தரவு

அதோடு தமிழக அரசின் சார்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறித்த பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தங்களால் எந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது குறித்த பட்டியலை கர்நாடகம் வருகிற திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவின் மீதான விரிவான விசாரணை நாளை நடைபெறும் என்றும் அறிவித்தனர்.

நாரிமனுடன் சித்தராமையா ஆலோசனை

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காவிரி நீர் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திடீர் நீர் திறப்பு

இதனிடையே திடீரென கர்நாடக அரசு முறையான அறிவிப்பு இல்லாமல் ரகசியமாக காவிரி ஆற்றில் நீரை திறந்து விட்டுள்ளது.

25டிஎம்சி

கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக 25 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாம்.

விவசாயிகளால்….

காவிரியில் நீர் திறந்து விடுவதை பகிரங்கமாக அறிவித்தால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என்பதால் இப்படி ரகசியமாக நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: