அன்னை தெரசா புனிதராக பிரகடனம்- வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவிப்பு

mother-teresaவாடிகன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை போப் பிரான்சிஸ் இன்று புனிதராக அறிவித்தார். வாடிகனில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விழாவில் அன்னை தெரசா புனிதராக பிரகடனம் செய்யப்பட்டார். அல்பேனியாவில் பிறந்து 1929-இல் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார் அன்னை தெரசா. கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு பல்வேறு சேவைகள் புரிந்த அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1997-ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் அன்னை தெரசா காலமானார்.

அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரசாவுக்கு அருளாளர் பட்டம் அளித்தார்.

வாடிகன் தேவாலயத்தில்

அதைத் தொடர்ந்து தெரசாவுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இன்று வாடிகன் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதராக பிரகடனம் செய்தார்.

சுஷ்மா குழு

இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது.

கேஜ்ரிவால், மமதா பானர்ஜி மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான குழுவும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான குழுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மிஷினரி ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பின் தலைவர் சகோதரி மேரி பிரேமா தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து 50 கன்னியாஸ்திரிகளும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசோசா தலைமையில் இந்தியாவில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பேராயர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

tamil.oneindia.com

TAGS: