தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடகாவில் பந்த் தொடங்கியது- பலத்த பாதுகாப்பு!!

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் இன்று காலை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாண்டியா மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து 5-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த கோரி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது.

bandh

வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. கன்னட சேனே, கர்நாடக ரக்ஷண வேதிகே, டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், ஜெய் கர்நாடகா, கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கம், பெங்களூரு மாநகராட்சியின் 198 மாமன்ற உறுப்பினர்கள், பெங்களூரு மாநகராட்சி ஊழியர் மற்றும் தொழிலாளர் சங்கம், கர்நாடக மாநில அரசு ஊழியர் சங்கம், கர்நாடக மாநில ஆரம்பம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம், பெங்களூரு சுற்றுலா கார் உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக மால்கள் உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர் சங்க கூட்டமைப்பு, பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கம், கர்நாடக மாநில பெட்ரோல் நிலைய உரிமையாளர் சங்கம், கர்நாடக மாநில வாடகைக் கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம், கர்நாடக திரையரங்கு உரிமையாளர் சங்கம், கன்னட திரைப்பட வர்த்தக சங்கம், கன்னட நடிகர்கள் சங்கம், கர்நாடக மாநில சிறுதொழில் சங்கம் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள், அமைப்புகள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த முழு அடைப்பால் அரசு, தனியார் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. திரையரங்குகள் மூடப்பட்டு படப்பிடிப்புப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 23 ஆயிரம் பேருந்துகள், 60 ஆயிரம் வாடகை கார்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் முழு அடைப்பினால் ஓடவில்லை. ஆனால் ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.

இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் கர்நாடகம் முழுவதும் ஒளிபரப்பப்படும் 52 தமிழ் சேனல்களுக்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. கடந்த 4 நாட்களாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. கர்நாடகம் செல்லும் 458 தமிழக அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: