தண்ணிர் திறப்பை நிறுத்தாவிட்டால் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்- கன்னட அமைப்பு எச்சரிக்கை

cauvery-protest2கிருஷ்ணகிரி: தமிழக அரசுப் பேருந்துகள் இன்று ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபலேவில் முதல்வர் ஜெயலலிதா படத்தை எரித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால் கர்நாடகத்தில் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு பகிரங்கமாக எச்சரித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அத்திபலே இன்று போர்க்களம் போலக் காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்தபடி உள்ளன. இன்றும் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்தும், அவரது உருவப் படத்தை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 200க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர். ஓசூர் வழியாக கர்நாடகத்திற்குள் எந்த வாகனமும் நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் எந்த வாகனமும் செல்லவில்லை. இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. அனைத்து வாகனங்களும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் வன்முறையும் போராட்டமும் குறைந்தால்தான் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1991 போன்ற கலவரத்தை சந்திக்க நேரிடும் என்று தமிழர்களின் வீடுகள், நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு எச்சரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamil.oneindia.com

TAGS: