சென்னையில் ஒட்டகம் வெட்ட தடை நீடிக்கும்

சென்னையில் ஒட்டகம் வெட்டுவதற்கென பிரத்யேகமான கூடங்கள் இல்லாததால், அவற்றை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்களை வெட்டி குர்பானி அளிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஒட்டகங்களை வெட்டக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒட்டகங்களை வெட்டுவதற்கு சட்டத்தில் தடை இல்லை என்றாலும் அதற்கு தகுந்த இடங்கள் சென்னையில் இல்லை என்பதால் அவற்றை வெட்டக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று உத்தரவிட்டது. வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இதற்கென பிரத்யேகமான இடங்களை உருவாக்க, ஒரு குழுவை அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை நெருங்குவதால், விரைவில் ஒட்டம் வெட்டுவதற்கென இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் எனக் கோரி இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, இங்கே ஒட்டகம் வெட்ட பிரத்யேகமான இடங்கள் இல்லை என்பதால், தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டனர்.

மேலும், ஒட்டகம் வெட்டப்படாமல் இருப்பதை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றும் மீறி வெட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையமே பொறுப்பு என்றும் தமது உத்தரவில் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தடா ரஹீம், தடையை மீறி வரும் செப்டம்பர் 13ஆம் தேதியன்று ஒட்டகங்களை வெட்டப்போவதாகத் தெரிவித்தார். -BBC

TAGS: