பெங்களூருவை விட்டு வெளியேறி சாரை சாரையாக தமிழகம் திரும்பும் பல லட்சம் தமிழர்கள்!

bangalore546ஓசூர்: இந்திய நாட்டுக்குள்ளே அகதிகளாக 1991-ம் ஆண்டு பல லட்சம் தமிழர்கள் கர்நாடகாவை விட்டு தமிழகம் திரும்பிய அதே பெருந்துயரம் மீண்டும் நிகழ்ந்து வருகிறது… கன்னடர்களின் தற்போதைய வன்முறையால் இதுவரை பெங்களூரு நகரை விட்டு அங்கு வசித்து வந்த 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சாரை சாரையாக வெளியேறி தமிழகத்துக்கு திரும்பி வருகின்றனர்.

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நேற்று முன் தினம் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 52 ஆம்னிப் பேருந்துகள், 50 லாரிகள், 20 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழக பதிவெண் கொண்ட லாரிகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் தமிழக -கர்நாடகம் இடையே வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

வாகனப் போக்குவரத்து நிறுத்தம்

ஒசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையில் பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட இரு மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் இரு மாநிலங்களிடையே வாகனங்கள் இயக்கப்படவில்லை.

1 லட்சம் பேர் வெளியேறினர்..

தமிழகத்தில் இருந்து சென்ற தொழிலாளர்கள், பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்டோர் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்பியுள்ளனர். கடந்த 2 நாள்களாக கர்நாடகத்தில் இருந்து தமிழர்கள் தொடர்ந்து வெளியேறி தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

உடைமைகளை விட்டுவிட்டு…

கர்நாடகத்தில் தமிழ்ப் பேசினாலே தாக்குகின்றனர். பல லட்சம் தமிழர்கள் வன்முறைச் சம்பவங்களை தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்கள் மூலமும் தெரிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் எனத் தப்பியோடி வந்து கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகாவில் வாழ முடியுமா?

கர்நாடகாவில் இனி தமிழர்கள் நுழையவோ வாழவோ முடியுமா? என்ற கேள்வியை கடந்த ஒரு வார வன்முறைச் சம்பவங்கள் எழுப்பி உள்ளன. அதே நேரத்தில் தமிழகத்தில் கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: