காவிரியில் இருந்து புதன்கிழமை (செப்டம்பர் 21) முதல், வரும் 30-ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 3,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நீர் வளத் துறைச் செயலர் சசிசேகர் தலைமையில் தில்லியில் 7-ஆவது காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி நீரின் வரத்து, சேமிப்பு, பயன்பாடு தொடர்புடைய குறிப்புகள் தொடர்புடைய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில அரசுகளின் தலைமைச் செயலர் ராம மோகன் ராவ் (தமிழகம்), அரவிந்த் ஜாதவ் (கர்நாடகம்), மனோஜ் பரிதா (புதுச்சேரி), கேரள அரசு சார்பில் அம்மாநில பொதுப் பணித் துறை அதிகாரிகள், காவிரி விவகாரத்துடன் தொடர்புடைய மாநிலங்களின் காவிரி தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை 11.30 முதல் மாலை 5 மணி வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் குழுவின் தலைவர் சசி சேகர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருத்தொற்றுமை இல்லை: காவிரி பகுதியில் ஆண்டுதோறும் பொழியும் மழை நீர் அளவு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம், கர்நாடக அணைகளுக்கு தினமும் வரும் நீரின் அளவு, கர்நாடக மக்களின் குடிநீர் தேவை, தமிழகத்தில் சம்பா பயிரை காப்பது உள்ளிட்டவற்றை மேற்பார்வைக் குழு கவனத்தில் கொண்டது.
நீர்ப் பங்கீடு, தேவை தொடர்பாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவை சார்பில் விரிவாக அவற்றின் பிரதிநிதிகள் விளக்கினர். இதைத் தொடர்ந்து, மேற்பார்வைக் குழு முன்மொழிந்த அறிவியல்பூர்வ அடிப்படையிலான நீர் திறப்பு யோசனைக்கு சம்பந்தப்பட்ட நான்கு மாநில அரசுகளும் உடன்படவில்லை. இதையடுத்து, காவிரியில் இருந்து புதன்கிழமை (செப்டம்பர் 21) முதல் வரும் 30-ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 3,000 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது.
புதிய வழக்கம்: காவிரி பகுதியில் பொழியும் மழை அளவு, நீர் வரத்து ஆகியவை தொடர்பாக மாநில அளவில் சேகரிக்கும் தகவல்கள் உள்ளிட்ட குறிப்புகளை, சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை இனி கடைப்பிடிப்பது என மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான சாதனங்களைப் பொருத்துவது, பராமரிப்பது உள்ளிட்டவற்றுக்கான செலவினத்தை நான்கு மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும்.
இந்த விவகாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப காவிரி மேற்பார்வைக் குழு அவ்வப்போது கூடி நிலைமையை ஆராயும். குழுவின் அடுத்த கூட்டம் வரும் அக்டோபரில் நடத்தவும் உத்தேசித்துள்ளோம். மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாதந்தோறும் மேற்பார்வைக் குழு கூடவும் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு இறுதியானது கிடையாது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவில் ஆட்சேபம் இருந்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உரிமை உண்டு என்றார் சசிசேகர்.
இன்று விசாரணை: இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 20) நடைபெறுகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், செப்டம்பர் 21 முதல் 10 நாள்களுக்கு திறந்து விட வேண்டிய நீரின் அளவு தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
“சொட்டு நீர் கூட தர மாட்டோம்’
காவிரி விவகாரத்தில் மேற்பார்வைக் குழு பிறப்பித்த உத்தரவு குறித்து கர்நாடக மாநில நீர் வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தில்லியில் செய்தியாளர்களிடம்
திங்கள்கிழமை கூறியதாவது:
காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் அடுத்த 10 நாள்களுக்கு தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையிட்டு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
காவிரியில் இருந்து சொட்டு நீரைக் கூட தமிழகத்துக்கு தர மாட்டோம். உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவோம். மேற்பார்வைக் குழு உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கர்நாடக மாநில நீர் வளம், தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம் என்றார் பாட்டீல்.
-http://www.dinamani.com