தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. தீர்மானம் போட இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபை

பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்ற ஒரு வரி தீர்மானத்தை நிறைவேற்ற இன்று கூடுகிறது கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்.

தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் வரை காவிரியில் தினமும் 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமையன்று உத்தரவிட்டது.

Cauvery Waters issue: Karnataka assembly pass one line resolution

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். இது குறித்து விவாதிக்க முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் பெங்களூருவில் புதன்கிழமையன்று நடைபெற்றது.

இதில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சட்டமன்றத்தை கூட்டி இதுதொடர்பாக தீர்மானம் போடுவது என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக சட்டசபை அவசர கூட்டம் இன்று கூடுகிறது. இதில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்ற ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

சித்தராமையாவைச் சந்திக்க மறுத்த பிரதமர்

இதனிடையே வியாழக்கிழமையன்று டெல்லி சென்ற சித்தராமைய்யா, காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சித்தராமைய்யாவிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் உமாபாரதியை அவர் சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சித்தராமைய்யா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம் என்று கர்நாடகா கூறி வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட தண்ணீரை முற்றிலும் நிறுத்தி விட்டது கர்நாடகா. இந்த நிலையில் இன்று கூடும் சட்டசபையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் பின் விளைவு வரும் 27ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தெரிய வரும். அப்போது ஒட்டுமொத்த கர்நாடக அரசும் சுப்ரீம் கோர்ட்டால் கடுமையாக கண்டிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், மத்திய அரசுக்கும் கூட நெருக்கடியான உத்தரவுகளை சுப்ரீ்ம் கோர்ட் பிறப்பிக்கக் கூடும் என்று தெரிகிறது.

-http://tamil.oneindia.com

TAGS: