இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை: இந்தியா கண்டனம்

india-pakistan-flag_0இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள், வானொலி நிகழ்ச்சிகளின் ஒளி-ஒலிபரப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறிய
தாவது:

இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்திருப்பது அந்நாட்டின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. இது துரதிருஷ்டவசமானதாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு இதுவரை தடை விதிக்கவில்லை என்றார் அவர்.

சார்க் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பாகிஸ்தானை சார்க் அமைப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமல்ல. சார்க் அமைப்பின் கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. நமது பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

பயங்கரவாதச் சூழல் இல்லாமல் இருந்தால்தான் அத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று விகாஸ் ஸ்வரூப் பதிலளித்தார்.

முன்னதாக, இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகளின் நிகழ்ச்சிகளை ஒலி-ஒளி பரப்புவதற்கு 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தடை விதிக்க வேண்டும் என்று கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு பாகிஸ்தான் ஊடக ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தத் தவறினால், அவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

-http://www.dinamani.com

TAGS: