டெல்லி: போபாலில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளுமே, புனே குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள். இவ்விரு என்கவுண்டர்கள் மூலமாக புனே குண்டு வெடிப்பு வழக்கு கோர்ட்டில் தீர்வு எட்டப்படும் முன்பே ‘முடித்து’ வைக்கப்பட்டுள்ளது.2014ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி புனே நகரில் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்பில் தொடர்புள்ள அகமது ரம்ஜான் கான், ஜாகிர் ஹூசைன், சேக் மெகபூப் ஆகிய மூவர் போபாலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தப்பியோடிய 8 சிமி தீவிரவாதிகளில் இவர்கள் மூவரும் அடங்குவர். சாப்பிடும் பாத்திரத்தால் சிறை காவலாளியை குத்தி கொலை செய்துவிட்டு இவர்கள் தப்பியோடினர். இந்த நிலையில் அவர்கள் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு என்கவுண்டரில் முகமது ஐசாசுதீன் மற்றும் முகமது அஸ்லாம் என்ற இரு சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களும் புனே குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என அப்போது அறிவிக்கப்பட்டது.
புனே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 5 தீவிரவாதிகளும் இவ்விரு என்கவுண்டர்களில் உயிரை பறிகொடுத்துள்ளனர். எனவே புனே குண்டு வெடிப்பு வழக்கு இத்தோடு முடித்து வைக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமித்தி ஆட்சி நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது.
ஆனால் இரு மாநிலங்களிலுமே சிமி தீவிரவாதிகளுக்கு போலீசாரின் துப்பாக்கி குண்டுகளே பரிசாக கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில் வாதாடும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் தீவிரவாத குற்றவாளிகளை போலீசார் இப்படித்தான் கையாளுவார்களா என்ற அச்சம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.போபாலில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகள் பெங்களூர்-கவுகாத்தி ரயிலில் குண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டவர்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து குண்டு வெடித்ததில், விடுமுறைக்கு ஊருக்கு திரும்பிய, பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.