500, 1000 செல்லாது… 6 மாதத்திற்கு முன்பே “ஸ்கெட்ச்” போட்டுத் தூக்கிய மோடி, ஜேட்லி!

moneyடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவை பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் 6 மாதத்திற்கு முன்பே எடுத்து விட்டனராம். மேலும் இவர்கள் மற்றும் மேலும் சில உயர் அதிகாரிகள் தவிர வேறு யாருக்குமே இது தெரியாது என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றியபோது அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது நாடே ஸ்தம்பித்துப் போனது. முதலில் அதிர்ச்சி அடைந்த மக்கள் பின்னர் பாராட்டத் தொடங்கினர். தற்போது மோடியின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. உண்மையில் இந்த முடிவை மோடி திடீரென எடுக்கவில்லையாம். மாறாக 6 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டார் என்கிறார்கள்.

கருப்புப் பணம்

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை அடியோடு அழிக்கும் நோக்கில்தான் இந்த அதிரடி முடிவை மோடி எடுத்துள்ளார். இந்த முடிவின் மூலம் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணச் சந்தையில் பெரிய ஓட்டை விழும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இவர்களுக்கு மட்டுமே தெரியும்

கடந்த ஆறு மாதங்களாக இதுதொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனைகள் நடந்து வந்துள்ளன. அந்த ஆலோசனைகளில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் ஜேட்லி, நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா, ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்கிகாந்த தாஸ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மட்டுமே ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவிக்கப் போகும் முடிவு தெரியுமாம்.

சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற இந்த முடிவு மிகவும் முக்கியமானது என்பதாலும் இதை சிக்கலின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதாலும் மிக மிக அதி ரகசியமாக இதை வைத்திருந்தார்களாம். மேலும் இதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதிலும் மோடி உறுதியாக இருந்தாராம்.

வேறு வழியில்லை

இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் மக்களுக்குப் பாதிப்பு வரும் என்றாலும் கூட கருப்புப் பணம், கள்ள நோட்டுக்களுக்கு எதிரான இந்த கடும் நடவடிக்கை அவசியம் என்பதால் இந்த முடிவில் பிரதமர் உறுதியாக இருந்தார் என்கிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: