இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் திகதி நள்ளிரவுடன் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இனிச் செல்லாது என்றும், பழைய நோட்டுக்களை எதிர்வரும் மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவி்ப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நாடே பணத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.
கையில் பணம் இருந்தும் சாப்பாட்டுக் கடைகளில் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கப்பட்டுவருவதால் பலர் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
இப்படியொரு நிலைவரும் என்று கற்பனை கூட யாரும் பண்ணிப்பார்க்கவில்லை. நிலமையை மத்திய அரசாங்கம் முன் கூட்டிக் கூட நினைத்து செயற்பட்டிருக்கவில்லை. எழுந்தமானமாக தங்களையுடைய முடிவை அறிவித்து மக்களை தெருவுக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது மோடி அரசு.
கடந்த மூன்று நாட்கள் மட்டுமல்ல, இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலமை நீடிக்கும் என்பது தான் இன்றைய களநிலவரம் உணர்த்துகின்றது.
கடந்த எட்டாம் திகதி இரவு பிரதமர் மோடி 500, 2000 புதிய நோட்டுக்கள் 10ம் திகதியில் இருந்து நடைமுறைக்குவரும் என்றும், வங்கிகளில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் வங்கிகளுக்கு வந்ததே 2000 ரூபாய் நோட்டுக்கள் தான். அவர் அறிவித்ததைப் போன்று இன்னமும் 500 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை.
அன்றாடத் தேவைக்காக சாதாரண மக்கள் 100, 500 ரூபாய்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்பொழுது வங்கிக்குச் சென்று பழைய நோட்டுக்களை வைப்பில் இடுபவர்கள் ஒருபுறமிருக்க, தங்கள் தேவைகளுக்காக பணத்தை மாற்றுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் மட்டும் தான் கொடுக்கப்படுகின்றது.
அதுவும் இரண்டு இரண்டாயிரம் ரூபாய் தாள். அந்த இரண்டு தாள்களையும் மாற்றி தங்களுக்கான பொருட்களை வாங்க நாயாய் பேயாய் அலைய வேண்டிய அவலத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
இவை ஒருபுறமிருக்க, நாட்டில் இப்பொழுது இயங்கும் ஏடிஎம் சென்டர்களில் 70 மீதமானவை இயங்காத நிலையில் தான் இருக்கின்றன. இயங்கும் ஒரு சில ஏடிஎம் சென்டர்களில் நீண்டவரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றார்கள்.
இன்னொருபுறத்தில் மோடியின் ஒரு நாள் அறிவிப்பு ஏதோ புயல்மாதிரி வந்திருக்கிறதே தவிர, அது திட்டமிடப்படாமல் அதிரடி காட்ட மட்டும் வந்திருப்பதை உணர முடிகின்றது. ஏனெனில் புதிய 2000 ரூபா, மற்றும் 500 ரூபா நோட்டுக்களை ஏடிஎம் களில் இருந்து பெறமுடியாது என்பது தான் விசித்திரம்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதும், கள்ள நோட்டுக்களை இல்லாமல் செய்வது வரவேற்கத்தக்கது தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அது சாதாரண சாமான்ய மக்களின் வயிற்றில் அடிக்க கூடியதாக இருக்க கூடாது.
கடந்த மூன்று நாட்களாக சம்பளமும் பெறமுடியாமல், கையில் இருப்பதையும் மாற்ற முடியாமல், மாற்றினால் பெரிய தொகை ஒரு தாளாக வருவதையும் மக்கள் எப்படித் தான் தாங்கிக்கொள்வார்கள்.
இந்தத் திட்டம் தொடர்பில் தெளிவான முடிவிருந்திருந்தால் முன்னதாகவே அரசாங்கம் ஏடிஎம் மெசின்களை அதற்கு ஏற்றால் போல் தயார்ப்படுத்திய பின்னரும், வங்கிகளில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் போதியளவு வழங்கப்பட்ட பின்னர் அறிவித்தல் விடுத்திருப்பார்களாயின் அது மக்களின் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது.
நாட்டில் அசாதாரண சூழலுக்கு வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது. இப்பொழுது பெரும்பாலான கடைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் 500, 1000ரூபா நோட்டுக்கள் ஏற்கப்படமாட்டாது என்னும் பலகையோடு கூடவே 2000 ரூபாய் தாள் மாற்றுவதற்கும் இங்கு சில்லறை இல்லை என்று பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
இது, மேலும் ஒரு தவிப்பை மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. நாடு சீர் பெறுவதில் மக்களுக்கு அதிக பங்கு இருப்பது என்பதற்கு இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், நாட்டு மக்கள் தெருத்தெருவாக அலைய வைக்கின்ற நிலையை அரசாங்கம் எடுத்திருப்பதற்கு முன்னர் கூடி ஆராய்ந்திருக்க வேண்டும்.
கடந்த மூன்று நாட்களாக இந்திய வர்த்தகம் சற்று சரிந்திருப்பதாக இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது. நாட்டில் வர்த்தக நிலையங்கள் பல பணப்பிரச்சினையால் தவித்துக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, கறுப்புப் பணத்தை மீட்டு, இந்திய மக்களின் பெயர்களில் வைப்புச் செய்வேன், கள்ள நோட்டுக்களை ஒழிப்பேன் என்றெல்லாம் அறிக்கையும், பிரச்சாரமும் செய்த மோடி, திடீரென்று ஒரே இரவில் பணம் செல்லாது என்று அறிவித்தமையானது, ஏற்கனவே நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும், கள்ள நோட்டுக்களை அழிப்பதற்கும் என்று இருந்த குழுக்களின் தோல்வியே காரணம் என்பதை ஆளும் தரப்பு ஏற்றுத்தானாக வேண்டும்.
இதேவேளை இந்தியச் சந்தையில் ஏற்பட்ட சரிவு இந்திய நாட்டை அண்டியுள்ள இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்களாதேஸ் போன்ற நாடுகளிலும் பிரதி பலிக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
எது எப்படியோ, நாட்டில் பணம் செல்லாது என்று அறிவித்துவிட்டு, மோடி ஜப்பான் நோக்கி ஓடி….! மக்கள் பணம் மாற்ற வங்கிகளை நோக்கி ஓடி…! கடைசியி்ல் முகம் வாடி வந்திருக்கிறார்கள்.
இது இன்னும் எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை. ஆனால் அரசாங்கம் சாதாரண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை.
-http://www.tamilwin.com