சென்னை: இலங்கை கடற்படை நடத்தி துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவருக்கு விசைப்படகு ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த விசைப்படகை எடுத்துக் கொண்டு 8 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 8 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பக்கமாக இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்தனர். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை பார்த்த இலங்கை கடற்படையினர் விசைப்படசை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் விசைப்படகில் இருந்த கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அங்கிருந்து தப்பி கரைக்கு திரும்பினர். காயம் அடைந்த தினேஷ் மற்றும் நம்பியார் ஆகிய இரண்டு பேரும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் தொடர்பாக கடந்த 5ம் தேதிதான் இலங்கை மற்றும் இந்திய அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. அப்போது, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தேர்வு எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருப்பது மீனவ மக்களிடையே கலக்கதை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், மீனவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது நாடகம் என்பதை துப்பாக்கிச் சூடு சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் இளங்கோ கூறியுள்ளார்.