பானாஜி: எல்லையில் தாக்குதலை நிறுத்தக் கோரி பாகிஸ்தான், இந்தியாவிடம் கெஞ்சியதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே உள்ள மாச்சல் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கோவா மாநிலம் அல்டோனா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த விஜய் சங்கல்ப் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசுகையில், இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் கடுமையாக இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு அழைப்பு வந்தது. இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கெஞ்சினார்கள். எல்லையில் தாக்குதல் நடத்துவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. தாக்குதல் கூடாது என்றே விரும்புகிறோம். அதேசமயம், எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தானும் நிறுத்த வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தினோம். இதைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக எல்லையில் அத்துமீறல் நின்றுள்ளது. எல்லையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.