வங்கிகளுக்கு லீவ்…. ஏடிஎம்களில் பணமில்லை… மக்கள் தவிப்பு: மதுரையில் ஏடிஎம்கள் உடைப்பு

001மதுரை: நாட்டில் புழக்கத்தில் இருந்த 500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்டது. சில்லறை தட்டுப்பாட்டால் தினக்கூலிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளம் பெறும் ஊழியர்கள், அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் செயல்பாடு மற்றும் தினந்தோறும் வெளியாகும் அறிவிப்புகள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்னைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். தற்போது வங்கியில் ஏற்கனவே இருந்த 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது அந்த நோட்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 2000 ரூபாய் நோட்டை வாங்கிய மக்களும் அவற்றுக்கு சில்லரை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

வங்கிகள், அஞ்சலகங்களில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இனி, வங்கிகளில் அந்த பணத்தை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், வங்கி கணக்கு இல்லாதவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். புதிய கணக்கை தொடங்க வேண்டும் என்றால் பல்வேறு அடையாள அட்டைகளை கேட்பதால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். வங்கி கணக்கு இல்லாதவர்கள் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியை நாடி நேற்று வந்தனர். ஆனால், 2 நாள் விடுமுறை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வங்கிகள் விடுமுறை

சில்லறை தட்டுப்பாடு உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் பணத்திற்காக பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை தேடி அலைந்தனர். பல ஏடிஎம்கள் இயங்கவில்லை. சில ஏடிஎம்கள் திறந்திருந்தாலும் பணமில்லை என்ற பதிலை சொன்னதால் மக்களின் கவலை அதிகரித்தது.

விமானத்தில் வந்த 14 டன் பணம்

பணத்தட்டுப்பாட்டை போக்க நாசிக்கில் இருந்து விமானம் மூலம் புதிய 500 நோட்டுகள் நேற்று முன்தினம் காலை சென்னை வந்தது. அதில் 14 டன் கொண்ட 300 கோடி புதிய 500 நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணம் ரிசர்வ் வங்கியில் பிரிக்கப்பட்டு வங்கிகள், ஏடிஎம்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் கூட, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏடிஎம்கள் நேற்றும் மூடியே கிடந்தன. ரிசர்வ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

செயல்படாத ஏடிஎம்கள்

காலை 9 மணியளவில் திறக்கப்பட்டு பணம் வைக்கப்பட்ட ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். ஆனாலும், அதிலும் சில மணிநேரங்களிலேயே பணம் தீர்ந்து போனது. செயல்படாத ஏடிஎம்களில் காவலாளிகள் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர். வங்கி, ஏடிஎம் என ஒட்டுமொத்த சேவையும் முடங்கியதால் செலவுக்கு கூட பணம் இல்லாமல் பொதுமக்கள் திணறினர். எந்த ஏடிஎம்களில் பணம் இருக்கிறது என்று வீதி, வீதியாக இருசக்கர வாகனங்களில் பலரும் அலைந்தனர்.

ஏடிஎம் மிசின்கள் உடைப்பு

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்களின் மதுரை மண்டல மேலாளர் சமுத்திரம், சம்பவ இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் இயந்திரத்தை உடைத்த நபர் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறுதி அஞ்சலி

ஏடிஎம் மையங்கள் செயல்படாத காரணத்தால் பல பகுதிகளில் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு திங்கட்கிழமையாவது தீருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: