ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதி! மரணத்தின் பின்னர் அவரின் கனவு தகர்ந்து போகுமா? ஆட்டம் காணப்போகும் தமிழகம்

jayalalitha2தமிழகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகப்பூர்வமாக செய்தி வெளியிட்டிருந்தது.

அச்செய்தி வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகம் சோகத்தில் மூழ்கியது. மின்னல் வேகத்தில் தகவல் உலகம் எங்கும் பரவியது. அம்மையாரின் மரணச் செய்தி கேட்டு உலகத் தமிழ் மக்கள் கண்ணீரை காணிக்கையாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையோடு ஜெலலிதாவின் உடல் விதைக்கப்பட்டது.

நேற்றைய தினம் விதைக்கப்பட்டது ஜெவின் உடல் மட்டுமல்ல அக்கட்சியின் ஒற்றுமையும் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவரின் தீவிர முயற்சியால் திமுகவை அரசியல் களத்தில் இருந்து வீழ்த்தி தமிழகத்தில் அதிமுக ஆட்சியினைக் கொண்டுவந்திருந்தார்.

எனினும் அவரின் மறைவிற்குப் பின்னர் அக்கட்சியின் பொறுப்பை செல்வி ஜெயலலிதா பொறுப்பெடுத்தார். ஆரம்பத்தில் அதிமுகவில் பிரிவு ஏற்பட்டிருந்தாலும் பின்னர் நிலைமைகளை உணர்ந்து ஜெ. தலைமையில் கட்சிக்காரர்கள் ஒன்று திரண்டனர்.

அன்றிலிருந்து தன்னுடைய அரசியல் ஆசானாகிய எம்ஜிஆரின் வழியில் கட்சியையும், அரசியலையும் முன்னெடுத்தவர் ஜெ.

ஆனால், அவரின் மரணம் கூட ஒருவகையான மாயையில் தான் வந்து நிற்கிறது.

நேற்று முந்தினம் மாலை ஜெ. இறந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் அது தவறான செய்தி என்றும், முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அவர் காலமாகவில்லை எனவும் அப்பல்லோ அறிவித்தது.

இருப்பினும் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று உத்தியோகபூர்வமாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தான் இப்பொழுது தமிழக அரசியல் ஓர் கேள்விக்குறியில் வந்து நிற்கிறது.

ஜெயலலிதாவின் திடமான முடிவுகளும், எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காத குணமும், தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையையும் வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது வரலாறு.

இந்த நீண்ட அரசியல் பயணத்தில் அவரின் சமரசமில்லா செயற்பாடுகள் நேற்று முந்தினம் இரவோடு அடங்கியிருக்கிறது.

ஏனெனில் எப்பாடுபட்டேனும் தமிழகத்திற்குள் கால் பதித்துவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது பாஜக

கடந்த காலங்களில் அக்கட்சியினால் தேர்தல் மூலமாக தமிழ் நாட்டிற்குள் உள்நுழைய முடியவில்லை.

இந்தியா முழுவதும் வீசிய மோடியலை தமிழ் நாட்டிற்குள் எடுபடவில்லை.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றியீட்டியது. திமுக எதிர்கட்சியை பிடித்தது.

திமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்ட காங்கிரஸ் ஒருவாறாக எட்டு ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

ஆனால், பாரதிய ஜனாதா கட்சி படுதோல்வியை சந்தித்தது. தமிழகத்திற்குள் மட்டும் தங்களால் கால் பதிக்க முடியாமல் போனதையிட்டு பெரும் கவலையிருந்த பாரதிய ஜனதா கட்சி, சந்தர்ப்ப சூழ்நிலைகளை எப்படியெல்லாம் ஏற்படுத்தலாம் என்பது குறித்து மந்திர ஆலோசனைகள் எல்லாம் நடந்தியிருந்தது.

முன்னதாக ஜெயலலிதா மீது இருக்கும் குற்றச்சாட்டுக்களை வைத்து அவரை வசப்படுத்த முடிவு செய்தது அக்கட்சி. எனினும் அதுவும் தோல்வியில் முடிந்து போக, தமிழகத்தின் முக்கிய பிரபலங்களை தமது கட்சிக்குள் இணைப்பதை மோடி விரும்பியிருந்தார்..

ரஜனிகாந்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், அதற்கு ரஜனி மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எல்லா முயற்சிகளையும் தமிழகத்திற்குள் முடக்கிவிட்டிருந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 22ம் திகதி ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாகவும் அதனை பாஜக சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொன். இராதாகிருஸ்ணன் அக்டோபர் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் அக்கூற்றுக்கு காரணம் அதிமுகவின் இன்றைய நிலையைத்தான் குறிப்பிட்டிருக்கிறாரா? என்று இப்பொழுது பெரும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஏனெனில் ஜெவின் உடல்நிலை குறித்தான முழுத்தகவல்களும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும், பிரதமருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகின்றது.

நேற்று முந்தினம் இரவு ஜெயலலிதா இறந்தார் என்ற அறிவித்த ஒருசில மணிநேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர்களும் புதிதாக பதவியேற்று இருக்கிறார்கள்.

இது சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதற்காகவே என்று வைத்துக் கொண்டாலும், இந்த பதவியேற்பில் மத்திய அரசாங்கம் தலையிட்டதாக இப்பொழுது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதாவது சசிகலா தரப்பினர் ஓ.பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக வரவிரும்பவில்லை. அவர்கள் எடப்பாடியைத் தான் முதல்வராக்குவதற்கு முயற்சி செய்தார்கள் என்றும், அதற்கு மத்திய அரசாங்கம் சம்மதிக்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க வேண்டும் என்று கூறியதாக அறியமுடிகின்றது.

அப்படியெனில், அதிமுக இனிமேல் எப்படி? எவ்வாறு? யார் ஆணைக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் தான் முடிவு செய்யும் என்றே பொருள் கொள்ளமுடிகின்றது.

தங்கள் கழுகுப்பார்வையை தமிழகத்திற்குள் நுழைக்க முடியாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது பெரும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாமல் இருந்த மத்திய அரசிற்கு இப்பொழுது வாய்த்திருக்கும் சந்தர்ப்பம் மகத்தானது தான்.

நேற்றைய தினம் ஜெயலலிதாவின் இறுதி நிகழ்வின் போது அதிமுக உறுப்பினர்களும் புதிய முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பிரதமர் வந்த போது நடந்துகொண்ட விதமே இப்பொழுது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வட தேசத்தில் மோடி அலையும், பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகளும் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதனை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.

இந்தி மொழித் திணிப்பு, இந்து சமயத்திற்கான முன்னுரிமை, சாதிய அரசியல் என்று அத்தனையும் பாஜக இன் செயற்பாடுகளால் நாடு கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இதில் இருந்து தமிழ்நாடு தனித்து, தனித்துவமாக நிற்கிறது.

ஜெயலலிதா மீதான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது மற்றைய ஆட்சியாளர்களை தமிழ் நாட்டிற்குள் நெருங்கவும் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

தமிழகம் இன்று இவ்வளவு தூரத்திற்கு ஓரளவேணும் வளர்ச்சி கண்டிருக்கிறது எனில் அதற்கான முக்கிய காரணம் மத்திய அரசாங்களின் பிடிக்குள் தமிழகம் சிக்காமல் இருப்பது தான். ஆனால் இனிவரும் காலங்களில் அது நடந்துவிடுமோ என்னும் ஏக்கம் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது.

வழுவிழந்த, துணிவற்றவர்களின் கரங்களில் நாடு செல்லும் பொழுது அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழகத்தை ஆட்டிப்படைக்க முழுமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இனி தமிழகம் என்ன செய்யப்போகின்றது? பாஜகவின் கையில் தமிழகம் செல்வதைக்காட்டிலும் எதிர்க் கட்சியான திமுகவின் கரங்களில் இருப்பது நாட்டின் நலனுக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தமுடியும்.

இல்லையாயின் இத்தனை காலமும் தமிழக மக்கள் தங்கள் வாக்குகளால் கட்டிக்காத்த நாட்டை, சின்னாபின்னமாக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் சில கழுகுக்காரர்கள்.

வருமுன் காப்பது சிறந்தது. பெரும் அரசியல் தலைமை இருந்த வேளை மௌனமும், விசுவாசமுமாக இருந்தவர்கள், இப்பொழுது துடிதுடித்து வேறு ஒருவருக்கு விசுவாசத்தைக் காட்ட முனைந்து நிற்பது தமிழினத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம்.

ஜெவின் மறைவு தமிழகத்தில் மிகப்பெரியதொரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது. அதிமுக எங்கு சாயும் என்பதை இனிவரும் சில வாரங்கள் சரியாக கணித்துக் கூறும்.

தன்னுடைய மரணத்திற்குப் பின்னர் அதிமுக அரசியல் எவ்வாறு அமையும் என்பதை நிச்சையம் ஜெயலலிதா யோசித்து இருந்திருப்பார். ஆனாலும், அவர் தனது கட்சி உறுப்பினர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்.

அவரின் மரணத்தின் பின்னர் அக்கட்சியினர் ஜெவின் கனவை நினைவாக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நம்பி வாக்களித்த மக்களை இன்னொருவரின் பிடிக்குள் சிக்கவைக்காமல் இருப்பதே இவர்கள் ஜெயலலிதாவிற்கு செய்யும் மகத்தான வரமாகும்.

ஜெயலலிதா மீது உண்மையில் அதிமுகவினர் விசுவாசம் கொண்டவர்களாயின் அவர்கள் ஜெவின் சத்திய கனவிற்கு எதிராக செயற்படமாட்டார்கள் என்பது சர்வ நிச்சையம். பொறுத்திருந்து பார்ப்போம்.

-http://www.tamilwin.com

TAGS: