தமிழக அரசியலில் இப்பொழுது தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருப்பதனை உணரமுடிகின்றது.
கடந்த 5ஆம் திகதி இரவு 11.30 இற்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் உயிரிழந்தார்.
75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சரின் நிலை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியாமலேயே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
பல்வேறு தரப்பினரும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருந்தாலும் முதலமைச்சரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மாறாக முதல்வர் நலத்தோடு இருக்கிறார். சாதாரண காச்சல் தான், அவர் கூடிய விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று அறிக்கைகள் மட்டும் தான் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி இரவு முதலமைச்சர் மாரடைப்பினால் உயிரிழந்தார் என்ற செய்தி தமிழகம் எங்கும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியின் பொறுப்பை தனது தலையில் சுமந்த ஜெயலலிதா தனக்குப் பின்னர் அக்கட்சியினை யார் கொண்டு நடத்துவார்கள் என்பதில் ஏதேனும் முடிவுகளை அறிவிக்கவில்லை.
இந்த வாரம் தமிழகத்தின் துக்கவாரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெவின் இறப்பிற்குப் பின்னர் அடுத்து முதலமைச்சராக உடனடியாக ஓ.பன்னீர்ச்செல்வம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜெவின் உயிரிழப்போடு, அக்கட்சியில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தலைமைத்துவம், முடிவுகள் எடுக்கும் திறன் அதிகம் கொண்ட தலைவராக யாரும் இல்லை என்பதே வெளிப்படை.
இந்த நிலையில், தமிழகத்திற்குள் கால் பதிக்க முணைந்திருக்கும் ஆளும் மத்திய அரசாங்கம், ஒரு புது வியூகத்தை வகுத்திருக்கிறது.
அதாவது, இப்பொழுது இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை பயன்படுத்தி தான் நினைத்ததை செய்வதற்கான வேலைத்திட்டங்கள் தான் அவை.
ஜெவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக உடையும், ஆட்சி கலைந்து போகும் என்று பல்வேறு தரப்பினரும் ஆரூடம் கூறியிருந்தனர்.
அடுத்த திமுக தான் தமிழகத்தின் ஆட்சியை அமைக்கும் என்றும் பெரிதாகப் பேசப்பட்டது.
எக்காரணம் கொண்டும் தமிழகத்தின் ஆட்சி இப்பொழுது கலையக்கூடாது. அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஆட்சி கலைந்து போகவிருப்பின் அது கருணாநிதி தலைமையிலான திமுகவினருக்கு பெரும் சாதகமாக அமைந்துவிடும்.
ஏனெனில் பாஜகவினரால் இதுவரை காலமும் தமிழகத்திற்குள் நுழைந்து அரசியலை முன்னெடுக்க முடியவில்லை.
ஆனால், திமுக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில், அதிமுகவின் ஆட்சி தொடர்ந்து நடத்தப்படுவதே பாரதிய ஜனதா கட்சியினருக்கு சாதகமானது.
இதனால் தான் அவர்கள், ஜெயலலிதாவின் மறைவைப்பயன்படுத்தி இங்கே உள்நுழைந்திருக்கிறார்கள்.
ஆக, ஜெயலலிதாவின் குரல் மறைந்தது, தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். ஆனால், அதிமுகவினருக்கோ, மத்திய அரசிற்கோ அல்ல.
மத்திய அரசாங்கம் யார் யார் ஊழலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எவர் மீது எந்த வழக்குப் பதிவில் இருக்கின்றன போன்ற விபரங்களை வைத்திருக்கிறார்கள்.
இதனை வைத்து அதிமுக உறுப்பினர்களை மிரட்டுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.
இதுவரை காலமும் அம்மா அம்மா என்று ஓடிவந்து காலில் விழுந்தவர்கள் எல்லாம் இனி மோடி, மோடி என்று நாடிச்செல்வார்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழகத்திற்குள் நுழைய வேண்டும் என்கிற அவர்களின் கனவு மிகமிக எளிதாக ஜெவின் மறைவோடு சாத்தியப்பட்டிருக்கிறது. திமுகவை அதிகாரத்திற்கு விடக் கூடாது என்ற விடாப்புடி எல்லாம் மத்திய அரசின் திட்டம்.
ஜெவின் மரணத்தில் இன்னமும் மர்மம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் என்ன நோயினால் முழுமையாக பாதிக்கப்பட்டார். எப்போது இறந்து போனார்.
உண்மையில் அவர் பேசமுடியாத சூழ்நிலையில் தான் இருந்தாரா? இல்லை பேசவிடாமல் தடுத்தார்கள்? என்பது குறித்து இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை.
இதுதவிர இன்னும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனினும், அவை உறுதிப்படுத்தாத தகவல்களாகவே இருக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார், அவர் 2 மாதங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார். இது திட்டமிட்ட படுகொலை என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
அவை வெறும் வதந்திகள் என்று அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் யாவும், சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றன.
தமது தலைவியை இழந்த சோகத்தில் தொண்டர்கள் தவிக்கின்றார்கள். கட்சி உறுப்பினர்களோ அதுபற்றி கவலை கொள்வதாக தெரியவில்லை என்று ஆதங்கப்படுகின்றார்கள் அடிமட்டத் தொண்டர்கள்.
இனி திமுக சரியாக செயற்பட்டாலே அன்றி தமிழகத்தில் வரவிருக்கும் அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்த முடியும். ஏனெனில் தமிழகத்தில் அதிமுக தன்னுடைய சுய முடிவுகளைக்கொண்டு இனி செயற்படுமா என்பது சந்தேகமே.
ஜெயலலிதாவின் இழப்பு என்பது நரிகளுக்கு கிடைத்த வேட்டையாகவே பார்க்க முடியும். அந்த வேட்டையை இவர்கள் இனி மெல்ல ஆரம்பிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
-http://www.tamilwin.com