தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிலதாவின் திடீர் மரணத்தின் பின்னர் அதிமுகவில் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணரமுடிகின்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அடிக்கடி ஏற்படும் சட்டச்சிக்கல்களின் போதெல்லாம் அவரின் பதவிகளை நிரப்பியவர் தான் ஓ. பன்னீர்செல்வம்.
தேர்தல் முறைப்படி அல்லாமல் தமிழகத்தின் மூன்றாவது தடவையாகவும் முதலமைச்சராகும் வாய்ப்பை பெற்று இருக்கும் ஒரே அதிர்ஷ்டசாலி என்று இன்று தமிழக மக்களால் பேசப்படும் ஒரு நபராக அவர் மாறியிருக்கிறார்.
கடந்த 2001ஆம் ஆண்டும், 2015ஆம் ஆண்டும் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட சட்டச்சிக்கலின் போது முதலமைச்சராக தன்னுடைய பதவியை ஏற்றுக்கொண்ட பன்னீர்செல்வம், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெவின் கட்டளைகளுக்கு இணங்கித்தான் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
இதேவேளை மக்களின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் அஇஅதிமுக அரசாங்கம் இலக்காகியிருந்தது. கடந்தாண்டு சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளமும், அதற்கு அதிமுக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்நாட்களில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்ப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.
தவிரவும், மக்களின் பாதிப்பை அஇஅதிமுக சரியாக கையாளவில்லை என்ற மிகப்பெரியதொரு குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருந்தனர். இந்நிலையில் முதலமைச்சராக பதவியில் இருக்கும் பொழுதே ஜெயலலிதா மாரடைப்பினால் கடந்த 5ம் திகதி மரணமடைந்தார்.
அவரின் வெற்றிடத்திற்கு மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் பதவியில் அமர்ந்திருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக அவர் மூன்றாவது முறையும் ஆட்சி அதிகாரத்தில் அமரும் செயற்பாடு இது.
ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது முதலமைச்சராக செயற்பட்ட பன்னீர்செல்வம் ஓர் ஆணைக்கு உட்பட்டவராக, அதிகாரத்திற்கும், கட்டளைகளுக்கும் அடிபணிந்தவராக இருந்திருந்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தோடு மீண்டும் அதிகார மையத்திற்கு வந்திருக்கும் பன்னீர், தன்னை சுதந்திர முதலமைச்சராக காட்டி செயற்பட்ட விதம் இப்பொழுது பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
வர்தா புயலின் தாக்கத்தினால் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களே நிலைகுழைந்து போயிருக்கிறது இந்தவாரம். புயலின் தாக்கத்தினை சமாளிக்க முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசாங்கம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் மக்கள் மத்தியில் இப்பொழுது பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதேவேளை புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டிருக்கின்றனர். மக்களை சந்தித்த அவர்கள், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்திருக்கின்றனர்.
முதலமைச்சரின் மறைவினால் துவண்டு போயிருக்கும் மக்களிடத்தில் இப்பொழுது பன்னீர்செல்வத்தின் இந்த நடவடிக்கைகள் மெல்ல ஆறுதலை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் தலையாட்டி பொம்மையாக இருந்தார் என கிண்டலடிக்கப்பட்ட ஒருவர், பதவிக்கு வந்திருக்கும் நிலையில் தொடர்ந்தும் அதே நிலையில் தான் பன்னீர்செல்வம் இருப்பாராக இருந்தால் அவர் நிர்வாக திறனற்றவர் என்கின்ற குற்றச்சாட்டை தானே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார்.
இந்நிலையில் தன்னுடைய நிர்வாகத் திறனை நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இதனால் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாக்க விளைகிறார் என்பதை ஊகித்தறிய முடிகின்றது.
ஆனால், அதற்கு அதிமுகவின் பொதுச் செயலாளராக வரவிருக்கும் அந்த நபர் எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு வழங்குவார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ஏனெனில் அதிகார மையமாக அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் பொழுது பன்னீர்செல்வத்தின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு ஆதரவு கிட்டுமா என்பது சந்தேகமே.
எது எவ்வாறாயினும் ஓ. பன்னீர்செல்வம் வினைத்திறனோடு செயற்படுவாராயின் முன்னைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை பின்னுக்கும் தள்ளி மக்கள் மனங்களில் இடம் பிடிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
வர்தா புயலோடு அவர் செயற்பட்ட விதத்திற்கு மிதமான வாழ்த்துக்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் அவர் வினைத்திறனோடு செயற்பட்டால் மாற்றம் உறுதி.
-http://www.tamilwin.com
இனி யார்காலில் கும்ட்டுவிலுவது?தோழி காலிலா?திபாகாலிலா.
இந்த ஈனங்களை பார்த்தாலே குமட்டுகிறது– இப்படியும் சுய மரியாதை இல்லாத ஜென்மங்கள்–