ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 48.63 லட்சம் பேர் வேலை இழந்தனர்: அஜய் மாக்கன்

ajay_makanஅதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தில்லியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 48.63 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன்காரணமாக, அமைப்புசாரா வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சுமார் 48.63 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர்கள் வெளியூர்களையும், வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் ஆவார். தினமும் சுமார் 15ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள்
தில்லியில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இதனால், தில்லியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பவதை நிறுத்தவில்லை எனில், தில்லியில் சகஜ நிலை திரும்ப வெகுகாலம் ஆகும்.

வேலையில்லாமல் கஷ்டப்படும் இத்தகைய தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.5ஆயிரம் நிதி உதவி வழங்குமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அந்தக் கடிதத்துக்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்னையை முதன்மைப்படுத்தி தில்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து நாடாளுமன்ற வளாகம் நோக்கி, வரும் 24-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி பேரணியாக நடத்த உள்ளது என்றார் அஜய் மாக்கன்.

-http://www.dinamani.com

TAGS: