அனைத்து மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வுகாண நிரந்தர தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நதி நீர்ப் கிடைப்பதில் பிரச்னை இருப்பதுபோல, நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்னை நீடித்து வருகிறது. காவிரி பிரச்னைக்கு அடுத்து சட்லஜ் நதி நீர்ப் பிரச்னை, கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்னை ஆகிய தேசிய அளவில் பெரும் பிரச்னையாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற நதி நீர்ப் பிரச்னைகள் அனைத்தையும் விசாரிக்க ஒரு நிரந்தரத் தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுதவிர மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பங்கீட்டுச் சட்டம் 1956-ல் திருத்தம் மேற்கொண்டு சில அமர்வுகளை ஏற்படுத்தும் யோசனையும் மத்திய அரசிடம் உள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சக செயலாளர் சசி சேகர் கூறியதாவது:
நதி நீர் பகிர்வு பிரச்னைகளை விசாரிக்க ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிரந்தரத் தீர்ப்பாயம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பாயம் 3 ஆண்டுகளில் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும்.
இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் உடனடியாக அமல்படுத்தப்படும். இப்போது உள்ளதுபோல அரசு உத்தரவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்துடன் சேர்த்து, நதி நீர்ப் பிரச்னை தீர்வுக் குழுவும் அமைக்கப்படும். இதில் துறை சார்ந்த நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இடம் பெறுவார்கள்.
இது தவிர தனி அமர்வுகளை அமைக்கும் திட்டமும் உள்ளது. குறிப்பிட்ட நதி நீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டவுடன் அந்த அமர்வு கலைக்கப்பட்டுவிடும். இது தொடர்பான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.
இப்போது காவிரி, மகதாயி, ராவி-பியாஸ், வம்சதாரா, கிருஷ்ணா ஆகிய நதிகளின் நீர்ப் பகிர்வு தொடர்பாக 8 தீர்ப்பாயங்கள் நாட்டில் உள்ளன.
-http://www.dinamani.com

























