உலகின் சாலை விபத்து தலைநகரமாக இந்தியா

accidentஇந்தியா, உலகின் சாலை விபத்துத் தலைநகரம் என்று அழைக்கப்படும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தகுந்த நடவடிக்கைகள் மூலம் இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மதுக் கடைகள் இருப்பது அதிக அளவில் விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும், அத்தகைய மதுக் கடைகளுக்குத் தடை விதிக்கும் வகையில் ஆயத் தீர்வைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களின் மீது விளக்கம் அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. தற்போது செயல்பட்டு வரும் கடைகளின் உரிமத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு மேல் நீட்டிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது. அப்போது, சாலை விபத்துகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை

மேற்கோள் காட்டி நீதிபதிகள் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 2.37 லட்சம் சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. இந்த விபத்துகளில் 85,462 பேர் உயிரிழந்தனர். 2.59 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,768-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 51,204-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிவேகச் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தக் காரணங்களால் உலகின் சாலை விபத்துத் தலைநகரம் என்று இந்தியாவை அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கைகள் மூலம் இந்த நிலையை மாற்ற முடியும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது உள்ளிட்ட சாலை விதிகளை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

இந்தியா போன்ற தீவிர பொருளாதார வளர்ச்சியை மேற்கொண்டு வரும் நாட்டில், சாலை விதிகளை மிகத் தீவிரமாகவும், முறையாகவும் செயல்படுத்தினால்தான் விலை மதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

-http://www.dinamani.com

TAGS: