சென்னை: அத்தை ஜெயலலிதா மறைவில் எந்த மர்மமும் இல்லை என அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இருந்தவர்கள் தவிர தமிழக மக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உறவினர்கள் யாராலும் ஜெயலலிதாவை பார்க்க முடியாமலேயே போய் விட்டது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், கடைசியாக 6 மாதத்திற்கு முன்புதான் எனது அத்தை ஜெயலலிதாவை பார்த்தேன். அப்போது தான் பேசினேன். அதன் பின்பு வெளிநாடு சென்றுவிட்டேன்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு இந்தியா வந்தடைந்தேன். அதற்கு பிறகு அவருடன் பேசவில்லை. உடல் நலம் சரியில்லாமல் அத்தை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நானும் அங்கு தான் 70 நாட்கள் இருந்தேன். அத்தைக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றில் நானும் சசிகலா அத்தையும் கையெழுத்திட்டோம்.
அப்பல்லோவில் அத்தை ஜெயலலிதா 72 நாட்களாக சிகிச்சை பெற்றபோது எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர் பீலே ஆகோயோர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறிவந்தநிலையில் அதிகாரிகளுடன் அவர் பேசினார். தொடர்ந்து தலைவர்கள் வந்து பார்த்து சென்றனர்.
அப்படி இருக்கும் போது அப்பல்லோ போன்ற பெரிய தனியார் மருத்துவமனையில் மர்மம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கு தெரிந்த வகையில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கு முன்பு அன்றைய தினம் 3.30 மணிவரை நன்றாக தான் இருந்தார். எனவே அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.