பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 12 விவசாயிகள் மரணம் – பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு

farmer1சென்னை: பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதைப்பார்த்து மனம் உடைந்து தற்கொலை செய்தும், மாரடைப்பு ஏற்பட்டும் விவசாயிகள் இறக்கின்றனர். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்பலியான நிலையில் மேலும் 12 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அய்யடிமங்கலத்தில் விவசாயி கல்யாணசுந்தரம் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகியதால் அதிர்ச்சியில் கல்யாணசுந்தரத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி அருகே தேவதானம்பேட்டை கிராமத்தில் விவசாயி முருகன்,50 தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மூன்றரை ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர் கருகியதால் விவசாயி முருகன் மனமுடைந்தார்.

மாரடைப்பில் மரணம்

சீர்காழி அருகே அரசாளமங்கலத்தில் முருகேசன் பயிரிட்டிருந்த 2 ஏக்கர் நெய்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிரை கண்ட விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நெய்வாசல் கிராமத்தில் கருகிய நெற்பயிரை கண்ட பாலையாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

விவசாயி தற்கொலை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்குவளை அருகே கீழநாட்டிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் ,53. தனது 3 ஏக்கர் நிலத்தில் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கருக தொடங்கியதை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஞாயிறன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகையில் 4 விவசாயிகள் மரணம்

கீழ்வேளூர் அடுத்த வெண்மணி அருகே மேல காவாலக்குடியை சேர்ந்த விவசாயி தம்புசாமி,57 தான் 2 ஏக்கர் நிலத்தில் விதைப்பு செய்திருந்த சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதை கண்டு இவர், ஞாயிறன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே விழுந்து இறந்தார். கடந்த 3 தினங்களில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி, தஞ்சாவூர் விவசாயி

சிவகாசி அப்பய்யா என்ற விவசாயி சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் மன உளைச்சலில் இருந்தார். மாரடைப்பால் நேற்று காலையில் மரணமடைந்தார். அதேபோல் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒரு ஏக்கரில் நெற்பயிர் கருகியதால் அதிர்ச்சியில் வயலில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

81 பேர் பலியான சோகம்

பயிர்கள் கருகியதால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பருவமழை பொய்த்துப்போய் கடும் வறட்சியினால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகியதால் தமிழகம் முழுவதும் இதுவரை 81 பேர் பலியாகி விட்டனர் என்பதுதான் சோகம்.

tamil.oneindia.com

TAGS: