அரியலூர்: நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் மரணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை அரியலூர் மற்றும் நாகையைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளனர். இத்தோடு சேர்ந்து 98 விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோயில் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி கலியபெருமாள். இவர் தனது விவசாய நிலத்தில் மக்காசோளம் பயிரிட்டிருந்தார். வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மக்காசோளம் கருகத் தொடங்கியது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் தனது நிலத்திற்கு சென்ற விவசாயி கலியபெருமாள், காய்ந்து கருகிய மக்காசோள பயிரைப் பார்த்து மேலும், அதிர்ச்சி அடைந்தார். அதே இடத்தில் மயங்கி சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிப் பார்த்தப் போது அவர் உயிர் பிரிந்திருந்தது.
பயிர்கள் கருகிய சோகத்தில் கடந்த இரு தினங்களாக மன உலைச்சலில் கலியபெருமாள் இருந்ததாகவும், அந்த மனவேதனை மேலும் அதிகரித்து இன்று காலை மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி 55 வயதான சிவானந்தம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நெற்பயிர் கருகியதால் சிவானந்தம் கவலையில் இருந்ததாகவும், மன வேதனை அதிகரித்தால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
வறட்சியின் பாதிப்பால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐத் தொடப் போகிறது. பாதிப்படைந்த விவசாய நிலங்களை தமிழக அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். என்றாலும், தமிழக அரசு இதுபற்றி வாய் திறக்காமல் உள்ளது கவலை அளிக்கிறது.

























